வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனர் ஆய்வு


வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனர் ஆய்வு
x

பெரம்பலூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனர் ஆய்வு செய்தார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான அணில்மேஷ்ராம் நேற்று ஆய்வு செய்தார். அதன்படி பெரம்பலூர் அருகே கவுல்பாளையம் ஊராட்சியில், இலங்கை தமிழ் அகதிகளுக்காக ரூ.3 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 72 வீடுகளின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு, கட்டுமான பணிகளை விரைந்து முடிக்குமாறும், அனைத்து வீடுகளுக்கு தேவையான குடிநீர் வசதிகளை விரைவில் ஏற்பாடு செய்யுமாறும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். அதன் பின்னர் கவுல்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பார்வையிட்டு, தெரு விளக்குகள் அமைத்தல், சிறுபாலங்கள் கட்டுதல், சாலைகள் பராமரிப்பு குடிநீர் கிணறு தோண்டுதல், கழிவுநீர் கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் சரிவர நடக்கிறதா? என்பது குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

கவுல்பாளையம் ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அத்யாவசியப் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து, பெரம்பலூர் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருப்பதை பார்வையிட்டு மருந்துகளின் இருப்பு, கர்ப்பிணிகளை பதிவு செய்யும் பதிவேடு, 19 வயது வரை உள்ள வளரிளம் பெண்களின் வளர்ச்சியை கண்காணிக்கும் பதிவேடு, மருந்துகளின் தேவைகள் குறித்த பதிவேடு ஆகியவற்றை பார்த்து ஆய்வு செய்தார். நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் மூலம் பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் இளைய தலைமுறையினர், ஆய்வறிஞர்கள் பயன்படுத்தும் வகையில் ரூ.1 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அறிவுசார் மையத்தையும், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ.3 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


Next Story