மத்திய அரசு விதித்துள்ள ஜி.எஸ்.டி. வரியை திரும்ப பெற வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டத்தில் அரிசி ஆலை உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு


மத்திய அரசு விதித்துள்ள ஜி.எஸ்.டி. வரியை திரும்ப பெற வலியுறுத்தி  விழுப்புரம் மாவட்டத்தில் அரிசி ஆலை உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்  பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு
x

மத்திய அரசு விதித்துள்ள ஜி.எஸ்.டி. வரியை திரும்ப பெற வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டத்தில் அரிசி ஆலை உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம்


பொதுமக்களின் மிகவும் அத்தியாவசிய உணவுப்பொருளான அரிசி, கோதுமை, பருப்பு மற்றும் உணவு தானியங்களுக்கு மத்திய அரசு, 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரியை விதித்துள்ளது. இந்த வரிவிதிப்பால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதால், இதனை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று அரிசி ஆலை உரிமையாளர்கள், அரிசி மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லரை வியாபாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்திலும் நேற்று அரிசி ஆலை உரிமையாளர்கள், அரிசி மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லரை வியாபாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மூடிக்கிடந்த அரிசி ஆலைகள், கடைகள்

இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள 256 அரிசி ஆலைகளும் இயங்காமல் பூட்டிக்கிடந்தன. அதுபோல் மாவட்டம் முழுவதும் அரிசி மொத்த விற்பனை கடைகள், சில்லரை கடைகள் என 500-க்கும் மேற்பட்ட கடைகளும் மூடப்பட்டிருந்தன.

இவர்களின் இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதுபோல் 256 அரிசி ஆலைகளும் இயங்காததால் அந்த ஆலைகளில் நாள் ஒன்றுக்கு நடைபெறும் 3 ஆயிரம் டன் நெல் அரவை பணியும் முடங்கியது.

வர்த்தகம் இழப்பு

இதுகுறித்து அரிசி ஆலை உரிமையாளர்கள் கூறுகையில், ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பண்டல் செய்யப்பட்ட அரிசி, கோதுமை, பருப்பு என அனைத்து வகை உணவு தானியங்களுக்கும் 5 சதவீத வரிவிதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பதிவு பெற்ற பிராண்டுக்கு மட்டுமே 5 சதவீத வரி விதிக்கப்பட்டிருந்தது. தற்போது பண்டல் செய்யப்பட்ட அனைத்து விதமான அரிசி மூட்டைக்கும் 5 சதவீத வரி அமல்படுத்தப்பட்டால் ஒரு கிலோ அரிசி ரூ.5 வரை உயர வாய்ப்பு இருக்கிறது. இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

எனவே உணவுப்பொருட்களுக்கு விதித்துள்ள ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். இதனை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலைகள் மற்றும் அரிசி மொத்த, சில்லரை விற்பனை கடைகள் மூடப்பட்டுள்ளதால் 3 ஆயிரம் டன் அரிசி உற்பத்தி, 50 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல கோடி ரூபாய் வர்த்தகம் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றனர்.

பேரணி- ஆர்ப்பாட்டம்

மேலும் மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் மாவட்ட அரிசி ஆலை, நெல் அரிசி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நேற்று காலை விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்றனர். இப்பேரணியானது நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முன்பு முடிவடைந்தது.

அதனை தொடர்ந்து அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் குபேரன் தலைமை தாங்கினார். இதில் சங்க செயலாளர் வேல்முருகன், பொருளாளர் அன்சர்அலி, வட்டார தலைவர்கள் விக்கிரவாண்டி அப்துல்சலாம், திருக்கோவிலூர் முருகன், செஞ்சி மாணிக்கம், திண்டிவனம் கண்ணன், நிர்வாகிகள் சுல்தான், அக்பர்ஷெரீப், சம்சுதீன், அப்துல்சமது உள்பட பலர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். பின்னர் ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அவர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

1 More update

Next Story