நெல்லையை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்-குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்


நெல்லையை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்-குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்
x

நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து, விவசாயிகளுக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து, விவசாயிகளுக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.

குறைதீர்க்கும் கூட்டம்

நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். பயிற்சி உதவி கலெக்டர் கிஷன்குமார், வேளாண்மை இணை இயக்குனர் அசோக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ண குமார், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வறட்சி மாவட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் பெரும்படையார் பேசுகையில், நெல்லை மாவட்டத்தில் போதிய மழை பெய்யாததால் கார் சாகுபடி நடைபெறவில்லை. எனவே நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நஷ்டஈடாக வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு ரேஷன் கடைகளில் ஒரு நபருக்கு 5 கிலோ என்ற வீதத்தில் அரிசி வழங்கப்படுகிறது. அதனை 10 கிலோவாக உயர்த்தி வழங்க வேண்டும்'' என்றார்.

காரையாறு ரோடு

மணிமுத்தாறு விவசாயி சொரிமுத்து பேசுகையில், பாபநாசத்தில் இருந்து காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்லும் ரோட்டை ஆடி அமாவாசையை முன்னிட்டு திறந்து விட வேண்டும். மணிமுத்தாறு பாசன கால்வாயைகளை சீரமைக்க வேண்டும்.

இதை தொடர்ந்து விவசாயிகள் பேசுகையில், "மானூரில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்வதற்கு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்'' என்றனர்.

அதற்கு விரைவில் ராமையன்பட்டியில் முதன்மை கொள்முதல் நிலையம் அமைத்து கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மண் அள்ளுவதில் முறைகேடு

குளத்தில் மண் அள்ளுவதில் முறைகேடு நடைபெறுகிறது. அதனை தடுத்து நிறுத்த வேண்டும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

அதற்கு பதில் அளித்த கலெக்டர், பொதுப்பணித்துறை அல்லது ஊரக வளர்ச்சித்துறை சார்ந்த அதிகாரிகள் முன்னிலையில் விவசாயிகளுக்கு மட்டும் வண்டல் மண் வழங்க வேண்டும். அதனை மீறி தவறு நடந்தால் ஆதாரத்துடன் கண்டுபிடிக்கப்பட்டால் வாகனங்கள் பறிமுதல் செய்து சம்பந்தப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்'' என்றார்.

இந்த விவாதத்தின் போது விவசாயி ஒருவர், வேளாண்துறை அதிகாரிகள் பெரும்பாலானோர் பணிகளை சரியாக செய்வது இல்லை. சரியாக பணியை செய்யாத அதிகாரிகளை சஸ்பெண்டு (பணிஇடைநீக்கம்) செய்தால்தான் ஒழுங்காக வேலை செய்வார்கள் என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

பயிர் சாகுபடி குறைந்தது

தொடர்ந்து கலெக்டர் கார்த்திகேயன் பேசியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் ஜூன் மாதத்தில் 1.70 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது வழக்கத்தை விட 99.99 சதவீதம் குறைவு ஆகும். இந்த ஜூலை மாதத்தில் இது வரையில் 21.60 மில்லி மீட்டர் மழை கிடைத்துள்ளது. வழக்கமான மழையளவை விட இது 18.18 சதவிகிதம் குறைவாகும். இதனால் மாவட்டத்தில் பயிர் சாகுபடி குறைந்துள்ளது. அதுகுறித்து அரசுக்கு விரிவான விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து தாமிரபரணி பாசனத்தில் உள்ள வடக்கு கோடை மேலழகியான், தெற்கு கோடைமேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய் மற்றும் கன்னடியன் கால்வாய் ஆகிய 4 கால்வாய்களின் கீழ் பயன்பெறும் நேரடி மற்றும் மறைமுக பாசனப் பரப்புகளான 18 ஆயிரத்து 90 ஏக்கர் நிலத்துக்கு கார் பருவ சாகுபடிக்கும், குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதுவரையில் 106 டன் நெல் விதை விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 150 டன் நெல் விதைகள் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் விவசாயிகளுக்கு மின்கல தெளிப்பான், கால்நடை குடற்புழு நீக்கும் தொகுப்பு உள்ளிட்டவற்றை மானியத்தில் கலெக்டர் வழங்கினார்.


Next Story