தகவல் அறியும் உரிமை சட்டம் வார விழிப்புணர்வு பேரணி
அரசு போக்குவரத்து கழகம், தீயணைப்பு துறை சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் வார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தகவல் அறியும் உரிமை சட்டம்- 2005 விழிப்புணர்வு வாரம் அக்டோபர் 5 முதல் 12-ந் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தகவல் அறியும் உரிமை சட்ட வார விழிப்புணர்வு வாக்கத்தான் மற்றும் மாரத்தான் ஓட்டம் நேற்று காலையில் நடைபெற்றது. இதனை மாவட்ட தீயணைப்பு அலுவலர் அண்ணாதுரை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு வாக்கத்தான் மற்றும் மாரத்தான் ஓட்டம் கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்தில் இருந்து தொடங்கி கலெக்டர் அலுவலகம் வழியாக ரேஸ்கோர்ஸ் வரை சென்று மீண்டும் தெற்கு தீயணைப்புநிலையத்தில் நிறைவடைந்தது.
இதேபோல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கோவை சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் விழிப்புணா்வு வாரத்தையொட்டி விழிப்புணர்வு வாக்கத்தான் மற்றும் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. முன்னதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் நோக்கங்களான வெளிப்படையான நிலையை கொண்டு வருதல், பொறுப்புடைமையை மேம்படுத்துதல், ஊழலை ஒழித்தல் உள்ளிட்டவை குறித்து அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஜோசப் டயஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். தொடர்ந்து விழிப்புணர்வு வாக்கத்தான், மாரத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.