தேனி கலெக்டர் அலுவலகத்தில் சேதமடைந்த சாலையால் விபத்து அபாயம்
தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் சேதமடைந்த சாலையால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
தேனி கலெக்டர் அலுவலகம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தின் குடிநீர் தேவைக்காக கலெக்டர் அலுவலகம் பின்புறம் தேனி அல்லிநகரம் நகராட்சிக்கான பிரதான குடிநீர் குழாயில் இருந்து குழாய்கள் பதிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, கடந்த மாதம் ரூ.3½ லட்சம் செலவில் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டன. இதற்காக கலெக்டர் அலுவலகத்தில் இருந்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் செல்லும் சாலையில் குழிகள் தோண்டி குழாய்கள் பதிக்கப்பட்டன.
அதன்பிறகு சாலை சரிசெய்யப்படவில்லை. அரசு அலுவலர்கள், போலீசார், பொதுமக்கள் என பலரும் வந்து செல்லும் இந்த சாலையை சீரமைக்காமல் விட்டதோடு, ஏற்கனவே தோண்டப்பட்ட குழிகளும் சரியாக மூடப்படவில்லை. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறியும், சறுக்கி விழுந்தும் காயம் அடையும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இந்த வழியாக தான் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கு செல்ல வேண்டும். அங்கு வரும் மாற்றுத்திறனாளிகளும் சிரமங்களை சந்திக்கின்றனர்.
இதேபோல் தேனி புதிய பஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையிலும் குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்ட சாலை சீரமைக்கப்படாமல் விபத்து அபாயத்துடன் உள்ளது. 'கை புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை' என்பார்கள். எனவே, மாவட்ட உயர் அதிகாரிகள் அன்றாடம் கடந்து செல்லும் இந்த சாலையை சீரமைக்காமல், விபத்து அபாயத்துடன் வைத்துள்ளதால் மேலும் விபத்துகளால் உயிர் இழப்புகள், படுகாயங்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, இந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.