இரும்பு தடுப்பால் விபத்து ஏற்படும் அபாயம்


இரும்பு தடுப்பால் விபத்து ஏற்படும் அபாயம்
x
தினத்தந்தி 17 Sept 2023 1:15 AM IST (Updated: 17 Sept 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி மீன்கரை சாலையில் விபத்துகளை தடுக்க வைக்கப்பட்டு உள்ள இரும்பு தடுப்பால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி மீன்கரை சாலையில் விபத்துகளை தடுக்க வைக்கப்பட்டு உள்ள இரும்பு தடுப்பால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

விபத்து ஏற்படும் அபாயம்

பொள்ளாச்சி-மீன்கரை ரோடு கேரளாவுக்கு செல்லும் முக்கிய சாலையாகும். இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது விபத்துகளை தடுக்கும் வகையில் மீன்கரை ரோட்டில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் வளந்தாயமரம் பகுதியில் பாலம் அகலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டு உள்ளன. சாலை பணிகள் நடைபெறும் இடத்தில் விபத்துகளை தடுக்கும் வகையில், இரும்பு தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த இரும்பு தடுப்பு கம்பி சாலை வரை நீட்டி வைக்கப்பட்டுள்ளதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே செல்லும் நிலை உள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

ஒளிரும் ஸ்டிக்கர்

பொள்ளாச்சி-மீன்கரை சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாலம் அகலப்படுத்தும் பணி வளந்தாயமரம் பகுதியில் நடந்து வருகிறது. இதற்கிடையில் விபத்து ஏற்படாமல் இருக்க தடுப்பு கம்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்த கம்பி சாலையோரத்தில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இரவு நேரங்களில் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடுவதற்கு சாலையோரத்தில் வாகனத்தை திருப்பினால் நிச்சயம் விபத்தில் சிக்கி கொள்ள நேரிடும். மேலும் இரவு நேரங்களில் சாலையோரத்தில் உள்ள கம்பி இருப்பதே வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை.

அந்த கம்பியில் ஒளிரும் ஸ்டிக்கர் எதுவும் இல்லாததால் விபத்து ஏற்பட்டால் உயிரிழப்பும் ஏற்பட கூடும். வழக்கமாக சாலை பணிகள் மேற்கொள்ளும் இடங்களில் விபத்தை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் விபத்து நடக்கும் வகையில் தடுப்பு கம்பி உள்ளதால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்து உள்ளனர். எனவே அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு அந்த தடுப்பு கம்பியை அகற்றி விபத்து ஏற்படாத வகையில் மாற்று ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story