நெடுஞ்சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம்; நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை


நெடுஞ்சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம்; நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
x

நெடுஞ்சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருவள்ளூர்

திருத்தணி அடுத்த கனகம்மாசத்திரம் அருகே, சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருப்பதி மார்க்கமாக திருத்தணி, புத்தூர், ரேணிகுண்டா சென்னை மார்க்கமாக, திருவள்ளூர், ஆவடி, அம்பத்தூர் செல்லும் ஏராளமான பஸ்கள், கனரக வாகனங்கள் மற்றும் சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்த நிலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் கனகம்மாசத்திரம் கூட்டு சாலையில் மாடுகள், ஆடுகள் ஆகியவை சுற்றி திரிகின்றன.

அவ்வாறு கால்நடைகள் சுற்றித் திரிவதால் பஸ், லாரி, கார்கள் மட்டுமன்றி இரு சக்கர வாகனத்தில் செல்வோரும் விபத்தில் சிக்கி சாலையில் விழுகின்றனர். மேலும், ஒரு சில இடங்களில் சாலையின் நடுவே இந்த கால்நடைகள் அமர்ந்து விடுவதால் போக்குவரத்து தடை ஏற்படுகிறது. கவனிக்காமல் வரும் வாகன ஓட்டிகள் சாலையில் விழுவதுடன் கால்நடைகளுக்கும் காயம் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் நெடுஞ்சாலைகளில் கால்நடைகளை விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story