மண் அரிப்பால் கொடிங்கால் வாய்க்கால் கரை உடையும் அபாயம்
மண் அரிப்பால் கொடிங்கால் வாய்க்கால் கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஜீயபுரம்:
திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பகுதியில் இருந்து பிரியும் உய்யகொண்டான் வாய்க்கால் கோப்பு, சோமரசம்பேட்டை, திருச்சி மாநகர் வழியாக தஞ்சை மாவட்டம் வல்லம் வரை செல்கிறது. இந்த வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக வரும் காலங்களில் புலிவலம் பகுதியில் இருந்து கொடிங்கால் வாய்க்கால் வழியாக தண்ணீர் திறந்து விடப்படும். இந்த கொடிங்கால் வாய்க்காலானது குழுமணி, பேரூர், மருதாண்டாகுறிச்சி, கூடலூர் வழியாக சென்று காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்த கொடிங்கால் வாய்க்கால் தலைப்பு பகுதியில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் நரிமேடு என்ற பகுதியில் உள்ள வாய்க்கால் கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு கரையின் அகலம் குறைகிறது. மேலும் மண்அரிப்பின் காரணமாக கரை உடையும் அபாய நிலை உள்ளது. கரை உடைப்பு ஏற்பட்டால், அந்த பகுதியில் பல ஏக்கரில் பயிரிடப்பட்ட விளை பொருட்கள் தண்ணீரில் மூழ்கும் அபாய நிலை ஏற்படும். அதேபோல் கொடிங்கால் வாய்க்காலின் தலைப்பு பகுதியில் வாய்க்காலின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் அருகில் மண் அரிப்பை தடுப்பதற்கு கட்டப்பட்ட தடுப்புச்சுவரும் அரிப்பு ஏற்பட்டு உடைந்து விழும் நிலையில் உள்ளது. எனவே உடனடியாக மண் அரிப்பு ஏற்பட்ட பகுதியில் சுமார் 700 மீட்டர் தூரத்திற்கு தடுப்பு கட்டைகள் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.