பள்ளத்தில் தண்ணீர் தேங்கியதால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம்


பள்ளத்தில் தண்ணீர் தேங்கியதால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம்
x

பள்ளத்தில் தண்ணீர் தேங்கியதால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அரியலூர்

ஆண்டிமடம்:

தேங்கிய தண்ணீர்

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் கடைவீதியில் மழைநீர் வடிகால் வாய்க்கால் கட்டுவதற்காக சாலையின் இருபுறமும் கடைகளுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அந்த உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், சுமார் அரை கிலோ மீட்டர் அளவிற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் கடந்த 3 நாட்களாக தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர்.

இதனால் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் உள்ளே செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்கான உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க கடைகளுக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தேங்கிய நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

கோரிக்கை

சாலை விரிவாக்கத்திற்காக ஆக்கிரமிப்புகளை அகற்ற வியாபாரிகள் ஒத்துழைப்பு அளித்த நிலையில், தற்போது தோண்டப்பட்ட பள்ளத்தால் வியாபாரம் பாதித்துள்ளதாக வியாபாரிகள் வேதனையுடன் தெரிவித்தனர். எனவே ஸ்ரீமுஷ்ணம் ரோடு, ஜெயங்கொண்டம்-விருத்தாச்சலம் ரோடு உள்ளிட்ட நான்கு புறமும் வியாபாரிகளை பாதிப்புக்குள்ளாக்காமல் உடனடியாக கழிவுநீர் வாய்க்காலை கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்களும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் ஸ்ரீமுஷ்ணம் சாலையின் திருப்பத்தில் நான்கு திசைகளிலும் உள்ள சாக்கடைகளில் கழிவுநீர் தேங்கி குப்பைக்கூளமாக காணப்படுகிறது. அதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

கழிவுநீர் வாய்க்கால்

இது குறித்து வியாபாரி சாமிநாதன் கூறுகையில், கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்ற வியாபாரிகள் சங்கம் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தது. இருப்பினும் சாலை விரிவாக்க பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் கடைவீதிகளில் சாக்கடை கழிவு நீர் வாய்க்காலுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. நேற்று அது சீர் செய்யப்பட்டது. ஆனால் பள்ளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. எனவே அந்த தண்ணீரை வெளியேற்றிவிட்டு கழிவுநீர் வாய்க்காலை உடனடியாக கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

வாகன ஓட்டிகள் சிரமம்

அப்பகுதியை சேர்ந்த சின்னப்பன் கூறுகையில், ஜெயங்கொண்டத்தில் இருந்து விருத்தாசலம் வரை சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. சாலை பணியால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். புழுதி பறந்து இருசக்கர வாகனங்களில் செல்பவர்களின் கண்களில் தூசி விழுவதும். சாலையில் செல்லும்போது ஜல்லிக்கற்களால் கீழே விழுந்து அடிபட்ட சம்பவமும் நடந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதுகாப்பான முறையில் சாலையை செப்பனிட அறிவுறுத்த வேண்டும், என்றார்.


Next Story