சனத்குமார் நதி கால்வாயில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
தர்மபுரி நகராட்சி 2-வது வார்டில் உள்ள சனத்குமார் நதி கால்வாயில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
2-வது வார்டு
தர்மபுரி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இவற்றில் நகராட்சி எல்லையையொட்டி 2-வது வார்டு அமைந்துள்ளது. இந்த வார்டில் தர்மபுரி, திருப்பத்தூர் மெயின் ரோடு, பீமன் தெரு, கொட்டாய் மேடு, ராயப்ப கவுண்டர் தெரு, ராஜகோபால் கவுண்டர் தெரு, பெரமன் தெரு, ரத்தினம் வீதி உள்பட 16 தெருக்கள் அமைந்துள்ளன.
இந்த வார்டில் 484 வீடுகள் உள்ளன. 50-க்கும் மேற்பட்ட தெரு விளக்குகளும் உள்ளன. வார்டின் மக்கள் தொகை 1,858 ஆகும். இந்த வார்டில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 1,404. அதில் 672 ஆண் வாக்காளர்களும், 732 பெண் வாக்காளர்களும் உள்ளனர்.
கழிவுநீர் கலப்பு
தர்மபுரி வழியாக ஓடும் சனத்குமார் நதி கால்வாய் இந்த வார்டுக்குட்பட்ட பகுதியில் செல்கிறது. திருப்பத்தூர்- மொரப்பூர் சாலைகள் பிரியும் ரவுண்டானா, நகராட்சி பாதாள சாக்கடை திட்ட சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை இந்த வார்டில் அமைந்துள்ளன. இந்த பகுதியில் விவசாயிகள், தொழிலாளர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்த வார்டில் உள்ள அனைத்து தெருக்களின் சாலைகளும் குறுகலாக உள்ளன. இதேபோல் கழிவுநீர் கால்வாய்கள் சிறியதாக உள்ளதால் குப்பைகள் அகற்றுதல், கழிவுநீர் வெளியேற்றத்தில் நடைமுறை பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இந்த வார்டு பகுதியாக வழியாக ஓடும் சனத்குமார் நதி கால்வாயில் கழிவுநீர் கலப்பதால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதேபோல் தர்மபுரி நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் மூலம் வெளியேறும் கழிவுநீர் சனத்குமார் நதி கால்வாயில் கலப்பதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுகிறது. மேலும் வார்டின் பெரும்பாலான பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அப்பகுதி பொதுமக்கள் வைக்கின்றனர்.
சுகாதார சீர்கேடு
இதுகுறித்து வார்டு பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பீமன் தெருவை சேர்ந்த ஆனந்தன்:-
2-வது வார்டு பகுதியில் சாலைகளை விரிவுபடுத்த வேண்டும். இரவு நேரங்களில் தெருவிளக்குகள் எரியாமல் உள்ளன. இவற்றை சீரமைக்க வேண்டும். நகராட்சி பாதாள சாக்கடை திட்டம் சுத்திகரிப்பு நிலையம் இந்த பகுதியில் உள்ளது. இதற்கு செல்லும் கழிவுநீர் இடையில் சனத்குமார் நதி பகுதியில் திறக்கப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே சனத்குமார் நதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். இந்த நதியில் அடர்ந்து வளர்ந்துள்ள புதர்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
சாலை சீரமைப்பு
கொட்டாய் மேடு பகுதியை சேர்ந்த விவசாயி சாந்தமூர்த்தி:-
2-வது வார்டு பகுதியில் சாலை வசதி சரியாக இல்லை. எனவே சாலையை சீரமைக்க வேண்டும். இந்த வார்டு நகர எல்லை பகுதி மற்றும் ஊராட்சி எல்லை பகுதி அருகே இருப்பதால் அடிப்படை வசதிகளை விரிவுபடுத்துவதில் முழு கவனம் கிடைக்காத பகுதியாக உள்ளது. எனவே இந்த பகுதிக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் என்னென்ன என்பதை கண்டறிந்து அவற்றை விரைவாக செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெருவிளக்குகள்
தாயப்ப கவுண்டர் தெருவை சேர்ந்த விஜயா கிருஷ்ணன்:-
2-வது வார்டு பகுதியில் 4 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வருகிறது. எனவே குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும். நகர எல்லை பகுதியில் இருப்பதால் கிராமம் போன்ற சுற்றுப்புற சூழல் இந்த வார்டில் காணப்படுகிறது. இங்கு கழிவுநீர் கால்வாய்கள் மிகவும் சிறியதாக இருப்பதால் கழிவுகளை அகற்றுவதிலும் நடைமுறை பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதை கருத்தில் கொண்டு இந்த வார்டில் கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்க வேண்டும். இங்குள்ள திருப்பத்தூர் மெயின் ரோடு பகுதியில் தேவையான அளவில் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
என்ன சொல்கிறார் கவுன்சிலர்
2-வது வார்டு (அ.தி.மு.க) கவுன்சிலர் அலமேலு சக்திவேல்:-
தர்மபுரி நகராட்சியில் மிகவும் பின்தங்கிய பகுதியாக எங்கள் வார்டு உள்ளது. இந்த வார்டில் பொதுமக்களை அணுகி குறைகளை கேட்டு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இங்குள்ள கொட்டாய் மேடு பகுதிக்கு சாலை வசதி மற்றும் கழிவுநீர் கால்வாய் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்ற பொது மக்களின் கோரிக்கை நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்பில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.
இதேபோல் கொட்டாய் மேடு பகுதியில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டங்களை செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சனத்குமார் நதி கால்வாயில் கழிவுநீர் கலப்பதால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதே போல் இந்த கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.