ஆர்.கே. பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண் சாவு


ஆர்.கே. பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண் சாவு
x

ஆர்.கே. பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண் பரிதாபமாக இறந்தார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே. பேட்டை ஊராட்சி ஒன்றியம் விளக்கணாம்பூடி கிராமத்தை சேர்ந்தவர் விஜயன் (வயது 50). இவரது மனைவி சங்கீதா (42). இவர்களது மகள் ஜெயஸ்ரீ (18). இவர் நேற்று காலை துணி துவைப்பதற்காக அந்த கிராமத்தில் உள்ள துரை என்பவரின் விவசாய நிலத்தில் இருக்கும் கிணற்றுக்கு துணி துவைக்க சென்றார்.

படிக்கட்டில் அமர்ந்து துணிக்கு சோப்பு போடும்போது கையில் வைத்திருந்த சோப்பு நழுவி கிணற்றில் விழுந்தது. அதை பிடிக்க முற்பட்டபோது இவர் தவறி கிணற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கினார்.

அவரது அலறலை கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து கிணற்றில் மூழ்கிய அவரை வெளியே எடுத்து சிகிச்சைக்காக அதே கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவ்வாறு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ஜெயஸ்ரீயின் தாயார் சங்கீதா ஆர்.கே. பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story