கற்சாலையாக மாறிய தார்ச்சாலை


கற்சாலையாக மாறிய தார்ச்சாலை
x

அய்யாபட்டி ஏ.மேலையூரில் தார்ச்சாலை கற்சாலையாக மாறி வருவதால் கிராமமக்கள் வேதனை அடைந்து வருகின்றனர்.

சிவகங்கை

சிங்கம்புணரி,

அய்யாபட்டி ஏ.மேலையூரில் தார்ச்சாலை கற்சாலையாக மாறி வருவதால் கிராமமக்கள் வேதனை அடைந்து வருகின்றனர்.

விவசாய பணி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏ.மேலையூர், அய்யாபட்டி ஊராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். விவசாய பணிகள் அதிகம் நடைபெறும் ஏ.மேலையூர்கிராமத்தில் இருந்து குறுக்குசாலை பறவைகள் சரணாலயம் செல்ல குறைந்த பட்சம் 3 கிலோ மீட்டர் தூரத்தில் சென்றடையும் வகையில் உள்ளது.

ஏ.மேலையூர் சாலை வழியாக திருப்பத்தூர் - மேலூர் நெடுஞ்சாலைக்கு சென்று வேட்டங்குடிபட்டி பறவைகள் சரணாலயம் நுழைவாயில் வரை குறுக்கு சாலையாக பயன்பட்டு வருகிறது. சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த சாலை பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக அய்யா பட்டி ஏ.மேலையூரில் உள்ள தொடக்க பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் இந்த சாலையை பயன்படுத்தி தான் செல்கின்றனர்.

குண்டும் குழியுமான சாலை

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இந்த சாலை தற்போது குண்டும் குழியுமாக பயன்படுத்த முடியாத நிலையில் கற்சாலையாக மாறி வருகிறது. இதுகுறித்து இந்த கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் மருதுசெல்லம் கூறியதாவது:- பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய அய்யாபட்டி ஏ.மேலையூர் சாலை குண்டும் குழியுமாக கற்சாலையாக மாறி வருகிறது. இந்த சாலை வழியாக வாகனங்கள், 108 ஆம்புலன்ஸ்கள் செல்ல தயங்குகின்றன. இந்த பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற பதினெட்டாம்படி கருப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினந்தோறும் பூஜை நடைபெறுகிறது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

நடவடிக்கை

மேலும் சிங்கம்புணரி மருதிபட்டி முறையூர் வழியாக வரும் வாகன ஓட்டுனர்கள், மாணவர்கள் இந்த சாலையை பயன்படுத்த முடியாமல் சாலை ஓரத்தில் உள்ள மண் பகுதியில் நடந்து செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்கள். எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து கற்சாலையை தார்சாலையாக மாற்றிதர வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story