விழுப்புரம் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 7 இடங்களில் சாலை மறியல் 194 பேர் கைது


விழுப்புரம் மாவட்டத்தில்    இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 7 இடங்களில் சாலை மறியல்    194 பேர் கைது
x

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி விழுப்புரம் மாவட்டத்தில் 7 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 194 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்


விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், மின்சார திருத்த சட்டமசோதாவை திரும்ப பெற வேண்டும், உணவுப்பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும், வருமானவரி செலுத்த இயலாத ஏழைகளுக்கு மாதந்தோறும் ரூ.7 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த வகையில் விழுப்புரம் நேருஜி சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சவுரிராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் ஜெயச்சந்திரன், ஏழுமலை, வட்ட செயலாளர் நிதானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் செல்வம், திலகவதி, பிரபாகரன், ராமநாதன், மணி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

உடனே விழுப்புரம் மேற்கு போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட 35 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

திண்டிவனம்

திண்டிவனம் மேம்பாலம் கீழ் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் வட்ட செயலாளர் மாரியம்மாள் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட மைய உறுப்பினர் இன்ப ஒளி கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்.

இதில் நிர்வாகிகள் அய்யனாரப்பன், பாலமுருகன், கோவிந்தன், மஞ்சுளா, ஐயப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட9 பெண்கள் உள்பட 23 பேரை போலீசார் கைது செய்தனர்.

194 பேர் கைது

மேலும் கண்டாச்சிபுரத்தில் ஒன்றிய தலைவர் பிராங்ளின் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 28 பேரும், விக்கிரவாண்டியில் வட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 20 பேரும், திருவெண்ணெய்நல்லூரில் ஒன்றிய செயலாளர் செல்வக்குமார் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 31 பேரும், செஞ்சியில் வட்ட நிர்வாகி கோவிந்தராஜ் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 8 பேரும், கிளியனூரில் வட்ட செயலாளர் தனுசு தலைமையில் மறியலில் ஈடுபட்ட 49 பேரும் ஆக மொத்தம் மாவட்டம் முழுவதும் 7 இடங்களில் நடந்த சாலை மறியலில் ஈடுபட்ட 194 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான இவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story