அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து பா.ஜ.க.வினர் சாலை மறியல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 92 பேர் கைது


அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து    பா.ஜ.க.வினர் சாலை மறியல்    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 92 பேர் கைது
x
தினத்தந்தி 2 Nov 2022 12:15 AM IST (Updated: 2 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 92 பேர் கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி


சென்னையில் நேற்று பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் நடந்த மகளிர் அணி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அந்தவகையில் கள்ளக்குறிச்சியில் நான்கு முனை சந்திப்பில் பா.ஜ.க.வினர் மாவட்ட துணை தலைவர் ராஜேஷ் தலைமையில் நேற்று இரவு 7 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் தியாகராஜன், ரவி, மாவட்ட செயலாளர் சர்தார்சிங், மாவட்ட பார்வையாளர் ராஜ்குமார், ஒன்றிய தலைவர் முத்து, மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுந்தரம் உள்பட 42 பேரை போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.

சங்கராபுரம், ரிஷிவந்தியம்

சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் பா.ஜ.க மாவட்ட துணை தலைவர் வக்கீல் ஜெயதுரை, ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில், நேற்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில், நிர்வாகிகள் ராஜேஷ், பிரகாஷ், லோகநாதன், மூர்த்தி, தேவரத்தினம், பாஸ்கர், செந்தில், யுவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்ட 20 பேரை கைது செய்து, திருமண மண்டபத்தில் வைத்தனர்.

ரிஷிவந்தியம் பா.ஜ.க. சார்பில் பகண்டை கூட்டு சாலை மும்முனை சந்திப்பில் பிறமொழி மாவட்ட செயலாளர் சுந்தர் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியலில் ஈடுபட்ட 20 பேரை பகண்டை கூட்ரோடு போலீசார் கைது செய்தனர்.

தியாகதுருகம்

தியாகதுருகம் கடைவீதி பஸ் நிறுத்தத்தில் பா.ஜ.க. வினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

தகவல் அறிந்த தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன், பா.ஜ.க. வடக்கு ஒன்றிய தலைவர் ரகுநாதபாண்டியன் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தார்.


Related Tags :
Next Story