தே.மு.தி.க.வினர் சாலை மறியல்; 30 பெண்கள் உள்பட 220 பேர் கைது


தே.மு.தி.க.வினர் சாலை மறியல்; 30 பெண்கள் உள்பட 220 பேர் கைது
x
தினத்தந்தி 10 Sept 2023 12:15 AM IST (Updated: 10 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சுங்கக்கட்டண உயர்வை கண்டித்து விக்கிரவாண்டியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தே.மு.தி.க. கட்சியை சேர்ந்த 30 பெண்கள் உள்பட 220 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம்

விக்கிரவாண்டி,

சுங்கக்கட்டணம் உயர்வு

சுங்கக்கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க.வினர் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். இதில் மாநில துணை செயலாளர் ராஜ சந்திரசேகர், மாவட்ட தலைவர் கணபதி, துணை செயலாளர்கள் பாலாஜி, சூடாமணி, வெங்கடேசன், சுந்தரேசன், மாவட்ட பொருளாளர் தயாநிதி, மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயசீலன், நகர செயலாளர் மணிகண்டன், ஒன்றிய செயலாளர்கள் சுப்ரமணி, ஞானசேகரன், முருகன், முத்துசாமி, மதியழகன், ஜாபர் அலி, ராமச்சந்திரன், முருகன், பிரகாஷ், தணிகைவேல், யுவராஜா, மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் இந்திரா உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

சாலை மறியல்

பின்னர், அங்கிருந்து சுங்கக்கட்டண உயர்வை கண்டித்து கோஷமிட்டப்படி, விக்கிரவாண்டி சுங்கச்சாவடி நோக்கி நடந்து வந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் ஆனந்தன், சப்-இன்ஸ்பெக்டர் காத்தமுத்து, போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் போலீசார், அவர்களை தடுத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விழுப்புரம்-சென்னை சாலையில் திடீரென தே.மு.தி.க.வினர் அமா்ந்து கொண்டும், படுத்துக்கொண்டும் மறியலில் ஈடுபட்டனர்.

220 போ் கைது

இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 30 பெண்கள் உள்பட 220 பேரை கைது செய்து வேனில் ஏற்றினர். அப்போது மாவட்ட செயலாளர் வெங்கடேசன் நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அதில், தமிழ்நாட்டில் மொத்தம் 65-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. அவைகள் முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும். தி.மு.க. ஆட்சி பொறுப்பு ஏற்றதும், 60 கிலோமீட்டர் இடையில் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என்று அறிவித்தது.

போராட்டம் தொடரும்

ஆனால் அதை தற்போது வரை நடைமுறை படுத்தவில்லை. இந்த நிலையில், தற்போது உயர்த்துள்ள 10 சதவீத சுங்கக்கட்டண உயர்வை தடை செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். தற்போது பொதுமக்களின் நலனுக்கான ஆட்சி மத்தியிலும் இல்லை, மாநிலத்திலும் இல்லை. சுங்கச்சாவடி கட்டணம் வரைமுறை செய்யவில்லை எனில் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரையும் பனையபுரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் போலீசார் அடைத்தனர்.


Next Story