பள்ளி மாணவர்கள் சாலை மறியல்
கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாலை நேரம் மற்றும் விடுமுறை நாட்களில் இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஏற்கனவே விளையாடிவந்தனர். அவ்வாறு விளையாடும் போது சிலர் மைதானத்தை அசுத்தம் செய்து வந்தனர். இதனால் பள்ளி நிர்வாகம் மாலை நேரத்தில் மைதானத்தில் விளையாடுவதற்கு அனுமதி மறுத்தது. இருப்பினும் சில இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்து மைதானத்தில் விளையாடி வந்தனர். இந்த நிலையில் நேற்று பள்ளி விளையாட்டு மைதானத்தில் விளையாட அனுமதி வழங்கக்கோரி இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பள்ளியின் எதிரே உள்ள கச்சிராயப்பாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதையடுத்து மாணவர்கள், இளைஞர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.