அரசு பஸ்சை சிறைபிடித்து பள்ளி மாணவர்கள் சாலை மறியல்
தானிப்பாடி அருகே பள்ளி முடிந்து வெகுநேரம் ஆகியும் அரசு பஸ் வராததால் மற்றொரு பஸ்சை சிறைபிடித்து மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தானிப்பாடி அருகே பள்ளி முடிந்து வெகுநேரம் ஆகியும் அரசு பஸ் வராததால் மற்றொரு பஸ்சை சிறைபிடித்து மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு பஸ் சிறைபிடிப்பு
தண்டராம்பட்டிலிருந்து தானிப்பாடி வழியாக டி.வேலூர், வேப்பூர் செக்கடி ஆகிய ஊராட்சிகளுக்கு தினமும் மாலை 5.30 மணிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் மூலம் பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவ, மாணவிகள் பயணம் செய்கின்றனர். நேற்று முன்தினம் மாலை தானிப்பாடி பஸ் நிறுத்தத்தில் ஏராளமான மாணவ, மாணவிகள் காத்திருந்தனர்.
மாலை 6 மணிக்கு பின்னரும் பஸ் வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவ, மாணவிகள் அந்த வழியாக வந்த வேறு ஊருக்கு சென்ற அரசு பஸ்சை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.தகவலை அறிந்த போக்குவரத்து அலுவலர்கள் தானிப்பாடி போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் போக்குவரத்து கழக அதிகாரிகளை தொடர்பு கொண்டனர்.
மாற்று பஸ்
அப்போது மாணவ மாணவியர் செல்லும் வகையில் கல்நாட்டூர் புதூர் சென்று திரும்பிய அரசு பஸ்சை டி. வேலூர், வேப்பூர்செக்கடி வழியாக இயக்க நடவடிக்கை எடுத்து அந்த பஸ் மூலம் மாணவ மாணவியரை அனுப்பி வைத்தனர். இதனால் அந்தப் பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.