ஆனைமலையில் சாலை மறியல் போராட்டம்


ஆனைமலையில் சாலை மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 2 Feb 2023 12:15 AM IST (Updated: 2 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆனைமலையில் சுடுகாட்டில் நில பிரச்சினை தொடர்பாக, தோட்ட உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி முஸ்லிம் சமூகத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோயம்புத்தூர்

ஆனைமலை,

ஆனைமலையில் சுடுகாட்டில் நில பிரச்சினை தொடர்பாக, தோட்ட உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி முஸ்லிம் சமூகத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிலம் ஆக்கிரமிப்பு

ஆனைமலையில் ஆழியாற்றங்கரை செல்லும் வழியில் சுடுகாடு (கபர்ஸ்தான்) உள்ளது. அங்கு முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்களில் யாரேனும் இறந்தால், உடலை அடக்கம் செய்து வருகின்றனர். இதற்கிடையே அந்த சுடுகாட்டை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தாசில்தார் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

அப்போது தாசில்தார் மாரீஸ்வரன் மனுவை வாங்கிக்கொண்டு, சுடுகாடு இடத்தை அளவீடு செய்ததுடன், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 80 சென்ட் நிலத்தை முஸ்லிம் சமூகத்தினருக்கே அளந்து கொடுத்தார். மேலும் சுடுகாட்டில் இருந்த 24 தென்னை மரங்களுக்கு பட்டா வழங்கியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சமீபத்தில் அந்த பட்டா ரத்தானதாக தெரிகிறது. இருப்பினும், அருகே உள்ள தோட்ட உரிமையாளர் சுடுகாட்டில் தண்ணீர் விட்டதால், அங்கு புதைக்கப்பட்டு இருந்த சடலங்கள் பூமிக்குள் சென்றதாக தெரிகிறது.

சாலை மறியல்

இதையடுத்து தோட்ட உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி முஸ்லிம் சமூகத்தினர் 150-க்கும் மேற்பட்டோர் ஆனைமலை-சேத்துமடை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து ஆனைமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டு கீர்த்திவாசன், இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கவுதம், செல்வராஜ் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் ்தோட்ட உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். பின்னர் அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர். முன்னதாக சிறிது நேரம் மாற்றுப்பாதை வழியாக வாகனங்கள் சென்றன. மேலும் சாலை மறியலில் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story