செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்


செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்
x

வேலூரில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்

சாலைமறியல்

வேலூர் வசந்தபுரத்தில் உள்ள பர்மா காலனியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியில் ஒருவரின் வீட்டு மாடியில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வந்தது.

இதனால் ஆத்திரமடைந்த அந்தப்பகுதி பொதுமக்கள் நேற்று வசந்தபுரம் ரெயில்வே கேட் பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீக்குளிக்க முயற்சி

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் பொதுமக்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இதனால் பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதற்கிடையே அங்கு கையில் மண்எண்ணெய் கேனுடன் ஒரு பெண் வந்து தீக்குளிக்க முயற்சித்தார். இதைப்பார்த்த போலீசார் உடனடியாக அந்த பெண்ணிடம் இருந்து கேனை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், செல்போன் கோபுரம் அமைக்கப்படும் கட்டிடம் உறுதித்தன்மையற்றதாக உள்ளது. அதன் அருகில் அங்கன்வாடி உள்ளது. அங்கு செல்போன் கோபுரம் அமைத்தால் வருங்காலங்களில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றனர்.


Next Story