பொது வழியில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்
தச்சூர் கிராமத்தில் பொது வழியில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நரிக்குறவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆரணி
தச்சூர் கிராமத்தில் பொது வழியில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நரிக்குறவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பொது வழியில் சுற்றுச்சுவர்
ஆரணியை அடுத்த தச்சூர் கிராமத்தில் சமத்துவபுரம் அருகில் நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் அரசு குடியிருப்பு பகுதியில் வசித்து வருகின்றனர்.
அவர்கள் பஸ் நிறுத்தம் வருவதற்கு சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து வர வேண்டும், ஆகவே அவர்கள் கடந்த சில வருடங்களாகவே சமத்துவபுரம் வழியாக உள்ள பொது வழியினை பயன்படுத்தி வந்தனர்.
தற்போது ஊராட்சி மன்றத்தின் சார்பாக பொதுவழியினை அடைத்து சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
சாலை மறியல்
அதற்காக பள்ளம் எடுக்கும் பணி இன்று நடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த நரிக்குறவர்கள் ஆரணி- தேவிகாபுரம் நெடுஞ்சாலையில் தச்சூர் ஆரம்ப சுகாதார மருத்துவமனை அருகில் திடீரென சாலையில் மரத்தை வெட்டி சாய்த்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் ஊராட்சி மன்ற தலைவர் வடிவேல், ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.புகழ், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் போலீசார், மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரபி மற்றும் அலுவலர்கள் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது சுற்றுச்சுவர் அமைத்து அதன் வழியில் நடந்து வருவதற்கு நடைபாதை அமைத்து தருவதாக உறுதியளித்தனர்.
இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சுமார் ஒரு மணி நேரம் நடந்த சாலை மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.