ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியல்
வாணாபுரம் அருகே ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியல் நடைபெற்றது. இதனால் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாணாபுரம்
வாணாபுரம் அருகே ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியல் நடைபெற்றது. இதனால் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆபாசமாக பேசினார்
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சதாகுப்பம் கிராமத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நீர்நிலைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில் தூய்மை பணி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் அப்பகுதியை சேர்ந்த 1 மற்றும் இரண்டாவது வார்டு பொதுமக்களுக்கு அந்தப்பகுதியில் உள்ள கால்வாயில் வேலை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
வேலை செய்து கொண்டிருக்கும் போது அங்கு வந்த ஊராட்சி செயலாளர் அஜித்குமார் (வயது 31) பணியில் இருந்த பெண்களை ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.
இது குறித்து பொதுமக்கள் மற்றும் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் தட்டிக் கேட்டனர்.
சாலை மறியல்
உடனே அவர் தனது மோட்டார் சைக்கிளை எடுத்து செல்லும்போது ஒரு பெண்ணின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட வந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த வாணாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் தனிப் பிரிவு காவலர் ராமஜெயம் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் மதியம் 2.30 மணி அளவில் கள்ளக்குறிச்சி- திருவண்ணாமலை சாலையில் உள்ள சதாகுப்பம் வளைவு பகுதியில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சு வார்த்தை
அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய போது சதாகுப்பம் ஊராட்சி செயலாளர் அஜித்குமார் தொடர்ந்து அசிங்கமாகவும், ஆபாசமாகவும் பேசி வருவதாகவும், தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் 6 நாட்கள் வேலை செய்தால் இரண்டு நாள் கூலி மட்டும் வழங்கப்படுவதாகவும், இது குறித்து கேட்டால் சென்னைக்கு சென்று கேளுங்கள், தண்டராம்பட்டு அலுவலகத்திற்கு சென்று கேளுங்கள் என்று கூறுவதாக தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பழகன் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் இங்கு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
போலீசார் அவர்களிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மாலை 4.30 மணி அளவில் கலைந்து சென்றனர். இதனால் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டபோது, இது குறித்து மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவித்து துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரைப்பதாக தெரிவித்தார்.