பழங்குடியின கிராமத்திற்கு சாலை வசதி


பழங்குடியின கிராமத்திற்கு சாலை வசதி
x
தினத்தந்தி 27 Jun 2023 9:00 PM GMT (Updated: 27 Jun 2023 9:00 PM GMT)

கோத்தகிரி அருகே கம்பையூர் பழங்குடியின கிராமத்திற்கு முதல் முறையாக சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் பழங்குடியின மக்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி அருகே கம்பையூர் பழங்குடியின கிராமத்திற்கு முதல் முறையாக சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் பழங்குடியின மக்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

அடிப்படை வசதிகள்

நீலகிரி மாவட்டத்தில் இருளர், குரும்பர், தோடர், காட்டு நாயக்கர், பனியர், கோத்தர் என 6 வகையான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் வாழ்வியல் நிலையில் அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், மின்சாரம் போன்றவை கடந்த காலங்களில் சவாலாக இருந்தது. பழங்குடியின மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், அத்தியாவசிய தேவைகளை செய்து கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தநிலையில் கோத்தகிரி அருகே சோலூர்மட்டத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் கடைக்கோடி பகுதியில் கம்பையூர் பழங்குடியின கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 20 பழங்குடியின குடும்பத்தினர் உள்ளனர்.

அங்கு ஆதிவாசி மக்களுக்கு அடிப்படை வசதிகள் ஓரளவிற்கு செய்து கொடுக்கப்பட்டு இருந்தாலும், சாலை வசதி இல்லாமல் இருந்தது. எனவே, அவசர தேவைகளுக்கு ஆம்புலன்ஸ் கூட வர முடியாத நிலை காணப்பட்டது. இதனால் அவர்கள் தங்களது கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கெங்கரை ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

சாலை அமைப்பு

இதையடுத்து மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பாவியூரில் இருந்து கம்பையூர் வரை ½ கி.மீ. தொலைவிற்கு கான்கிரீட் சாலை அமைக்க ரூ.10.19 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், சாலை அமைக்க உள்ள பகுதி வனத்துறைக்கு சொந்தமான நிலம் என்பதால் சாலை அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து சாலை அமைக்க வனத்துறையிடம் இருந்து சிறப்பு அனுமதி பெறப்பட்டது. பின்னர் பணி தொடங்கப்பட்டு, ½ கி.மீ. தூரத்திற்கு கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை நேற்று முன்தினம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் முருகன், சோலூர்மட்டம் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர். இதில் துணைத்தலைவர், வனச்சரகர் ராம்பிரகாஷ், வார்டு உறுப்பினர் கமலா, கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர். முதன் முறையாக தங்கள் கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தி தரப்பட்டதால் பழங்குடியின மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story