அந்தியூரில் செங்கல் உற்பத்தியாளர்கள்-தொழிலாளர்கள் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு
அந்தியூரில் செங்கல் உற்பத்தியாளர்கள்-தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அந்தியூர்
அந்தியூரில் செங்கல் உற்பத்தியாளர்கள்-தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலை மறியல்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுமேட்டூர், சின்னத்தம்பி, மஞ்சளநாயக்கனூர், அத்தாணி, பிரம்மதேசம், பிரம்மதேசம் புதூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான செங்கல் சூளைகள் உள்ளன. இந்த சூளைகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
இந்த பகுதியில் செங்கல் தயாரிப்புக்கு மூலப்பொருளான செம்மண் எடுக்க அரசு அனுமதிப்பதில்லை. இதனால் கடந்த 2 ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழப்பை சந்தித்தாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று காலை 10 மணி அளவில் அந்தியூர் புதுமேட்டூரில் செங்கல் உற்பத்தியாளர்கள்-தொழிலாளர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் அந்தியூரில் இருந்து கோபி செல்லும் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
பேச்சுவார்த்தை
இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், கார்த்திக், அந்தியூர் மண்டல துணை தாசில்தார் ஜெகநாதன், வருவாய் ஆய்வாளர் சுதாகர், கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷ் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த ஈரோடு மாவட்ட கைசெங்கல் சூளை சங்கத்தின் மாவட்ட தலைவர் மாதேஸ்வரன் மற்றும் செங்கல் சூளை உரிமையாளர்கள், தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
போக்குவரத்து பாதிப்பு
அப்போது போலீசாரும், அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தவர்களிடம் உங்கள் கோரிக்கை குறித்து முறையாக விண்ணப்பமாக எழுதிக்கொடுங்கள், மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்கள்.
அதை ஏற்றுக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கலைந்து சென்றார்கள். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.