கூடுதல் பஸ்களை இயக்க வலியுறுத்தி பள்ளி மாணவ-மாணவிகள் சாலை மறியல்


கூடுதல் பஸ்களை இயக்க வலியுறுத்தி பள்ளி மாணவ-மாணவிகள் சாலை மறியல்
x

கூடுதல் பஸ்களை இயக்க வலியுறுத்தி கெலவரப்பள்ளி அணை அருகில் பள்ளி மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

மாணவ-மாணவிகள் அவதி

ஓசூர் அருகேயுள்ள கெலவரப்பள்ளி, தட்டிகானப்பள்ளி, இலங்கை அகதிகள் முகாம், நந்திமங்கலம், சித்தனப்பள்ளி ஆகிய கிராமங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தினமும் ஓசூருக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு வந்து செல்கின்றனர். அதேபோல அந்த பகுதிகளில் இருந்து தொழிலாளர்களும், விவசாயிகளும் அதிக அளவில் ஓசூருக்கு வருகின்றனர்.

இவர்களின் வசதிக்காக காலை 7.30 மணிக்கு பேரிகையில் இருந்து ஓசூருக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. இதையடுத்து 10 மணிக்கு மேல் பஸ் இயக்கப்படுகிறது. இதனால் காலை 7.30 மணிக்கு செல்லும் அரசு பஸ்சில் கூட்டம் அதிகமாக காணப்படும். இதனால் மாணவ-மாணவிகள், தொழிலாளர்கள் உரிய நேரத்தில் ஓசூருக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

சாலை மறியல்

இந்தநிலையில் பேரிகை-ஓசூர் வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வலியுறுத்தி நேற்று கெலவரப்பள்ளி அணை அருகே பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அந்த வழியாக வந்த அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் தாசில்தார் கவாஸ்கர், போக்குவரத்து துறை அதிகாரி சுதாகர் ஆகியோர் அங்கு சென்று மறியலில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மாணவ-மாணவிகள் சாலை மறியலை கைவிட்டனர்.

சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story