சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
கூடலூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கூடலூர்
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் கூடலூர் தோட்ட தொழிலாளர் தொழிற் பயிற்சி மையத்தில் நடைபெற்றது. முகாமுக்கு தொழிற்பயிற்சி மைய முதல்வர் ஷாஜி ஜோர்ஜ் தலைமை தாங்கினார். கூடலூர் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் பேசும்போது, சிறுவர்கள், மாணவர்கள் ஓட்டுநர் உரிமம் இன்றி சாலைகளில் வேகமாக வாகனங்களை இயக்குவது அதிகரித்து வருகிறது. இதனால் விபத்துகள் அதிகரித்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே இளைஞர்கள், மாணவர்கள் கண்டிப்பாக முறையான பயிற்சி பெற்று, ஓட்டுநர் உரிமம் பெற்று வாகனங்களை இயக்க வேண்டும். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனங்களை இயக்கும்போது, வாகனத்தை ஓட்டியவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும், பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் மற்றும் 25 ஆண்டுகள் ஓட்டுநர் உரிமம் பெற தடை விதிக்கப்படுகிறது.
எனவே, வாகனங்கள் இயக்கும்போது சாலை விதிகளை மதித்து, கவனமுடன் இயக்க வேண்டும் என்றார். கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரவீந்திரன், அஜித் ஆகியோர் பேசினர். பயிற்சி மைய மாணவர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக பயிற்றுநர் பெஞ்சமின் வரவேற்றார். முடிவில் பயிற்றுநர் செல்வகுமார் நன்றி கூறினார்.