சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


மதுரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

மதுரை

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் உத்தரவின் பேரில், மதுரை சரக போக்குவரத்து இணை ஆணையர் சத்திய நாராயணன் வழிகாட்டுதல் படி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று தெப்பக்குளம் பகுதியில் உள்ள காமராஜர் அரங்கத்தில், கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆட்டோ டிரைவர்கள், டாக்சி ஓட்டுனர்கள், பள்ளி வாகன ஓட்டுனர்கள், பயிற்சி பள்ளி மாணவர்கள் உள்ளிட்டவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சித்ரா (வடக்கு), சிங்கார வேலு (தெற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக போக்குவரத்து துணை கமிஷனர் குமார் கலந்து கொண்டு, போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து ஆட்டோ டிரைவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

மேலும் மதுரையில் சாலை விபத்தினை குறைப்பதற்கு அனைவரும் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். இதுபோல், போக்குவரத்து விதிமுறைகளை எவ்வாறு கையாள வேண்டும், அதிக ஆட்கள், மாணவர்களை ஏற்றி செல்லக்கூடாது, இருக்கைகள் மாற்றி அமைக்ககூடாது, பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும், போக்குவரத்து சிக்னல்களை கடைபிடிக்க வேண்டும், சீருடை அணியாமல் இருக்கக்கூடாது, குடிபோதையில் வாகனங்கள் ஓட்டக்கூடாது என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைதுறை கோட்ட பொறியாளர் வரலட்சுமி, போக்குவரத்து கழக பயிற்றுனர் ஜான்வெஸ்லி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், முரளி உள்ளிட்டடோர் கலந்துகொண்டனர். முன்னதாக சாலை பாதுகாப்பு பற்றிய காணொலி காட்சி காண்பிக்கப்பட்டது. விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.


Related Tags :
Next Story