நீடாமங்கலம் நாகை சாலை சீரமைக்கும் பணி தொடங்கியது.


நீடாமங்கலம் நாகை சாலை சீரமைக்கும் பணி தொடங்கியது.
x
தினத்தந்தி 31 Dec 2022 12:30 AM IST (Updated: 31 Dec 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலம் நாகை சாலை சீரமைக்கும் பணி தொடங்கி நடைபெறுகிறது. இருவழிச்சாலை திட்ட பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

நீடாமங்கலம் நாகை சாலை சீரமைக்கும் பணி தொடங்கி நடைபெறுகிறது. இருவழிச்சாலை திட்ட பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலை சீரமைப்பு

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள கோவில்வெண்ணியில் இருந்து நாகை வரையிலான தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இதனையடுத்து சாலையை சீரமைக்க தமிழக அரசு ரூ.114 கோடி ஒதுக்கீடு செய்தது. தற்போது நீடாமங்கலம் அருகே உள்ள வையகளத்தூர் பாலம் முதல் திருவாரூர் வழியாக நாகை செல்லும் சாலையை சீரமைக்கும் பணி தொடங்கி விறு,விறுப்பாக நடந்து வருகிறது. இந்த சாலை நாகையில் இருந்து மைசூர் வரை செல்லும் நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாகும்.

பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சாலை சீரமைக்கும் பணி காரணமாக ஜல்லி தூள் சாலையில் நிரப்பப்பட்டு உள்ளது. இதில் வாகனங்களும் சென்று வருகின்றன. இதன் காரணமாக தூசி கிளம்பி புகை மண்டலம் ஏற்படுவதால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் இந்த வழியாக சென்று வருகின்றன. இந்த நிலையில் சாலை பணிகள் நடப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்துடன் கடந்து செல்ல வேண்டி உள்ளது. புகை கிளம்புவதை தடுக்கும் வகையில் தினமும் சாலையில் நீர் தெளிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஒத்துழைப்பு தேவை

சாலை அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குவது என்பது குறைவாக உள்ளதாகவும், சாலையை செப்பனிடும்போது அதில் பொதுமக்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும், மாற்றுப்பாதையில் செல்வதற்கு முயற்சி எடுக்க வேண்டும் அவ்வாறு செய்தால் சாலை பணியை விரைந்து முடிப்பதற்கு ஏதுவாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சாலையின் இரு புறங்களிலும் உள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இருவழிச்சாலை திட்டம்

நீடாமங்கலத்தில் ரெயில்வேகேட் மூடப்படும் போது போக்குவரத்து நெருக்கடியை தவிர்த்திட மாற்று வழியாக பழைய நீடாமங்கலம் பாலம் பயன்படுத்தப்படுகிறது. வையகளத்தூர் மேம்பாலம் முதல் இந்த பாலம் வரையிலான இணைப்பு சாலையை புதுப்பிக்க வேண்டும்.

தஞ்சை முதல் நாகை வரை இருவழிச்சாலை அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story