மத்தூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்


மத்தூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
x
கிருஷ்ணகிரி

மத்தூர்

மத்தூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள வாலிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சாலூர் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு கடந்த ஒரு வாரமாக குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடமும், ஊராட்சி நிர்வாகத்திடமும் முறையிட்டுள்ளனர். ஆனால் அவர்கள் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் நேற்று காலிக்குடங்களுடன் சாலூர்- சாமல்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் சாமல்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போலீசார் உறுதி

அப்போது குடிநீர் தட்டுப்பாடு காரணமாக உரிய நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடியவில்லை. பள்ளி, கல்லூரி மாணவிகளும் சரியான நேரத்துக்கு செல்ல முடியவில்லை. சம்பந்தப்பட்டவர்களிடம் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சீராக குடிநீர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதையடுத்து சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து பெண்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக சாலூர் -சாமல்பட்டி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story