இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல்
x

விலைவாசி உயர்வை கண்டித்து நாமக்கல், ராசிபுரத்தில் சாலைமறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 130 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாமக்கல்

சாலை மறியல்

விலைவாசி உயர்வு, வேலையின்மை அதிகரிப்பு போன்றவற்றுக்கு மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையே காரணம் என கூறி மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நடந்த சாலைமறியல் போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அன்புமணி தலைமை தாங்கினார். மாநில மாணவர் மன்ற செயலாளர் தினேஷ் முன்னிலை வகித்தார். இதில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் ஜெயராமன், பொது செயலாளர் தனசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

130 பேர் கைது

அப்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வு தான் அனைத்து பொருட்களின் விலை உயர்வுக்கும் காரணமாக இருக்கிறது. எனவே பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். ரெயில்வே மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பிய கம்யூனிஸ்டு கட்சியினர் நாமக்கல் - மோகனூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் கைது செய்து, தனியார் வாகனத்தில் ஏற்றி திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்தனர். இதில் 25 பெண்கள் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல் ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் செங்கோட்டுவேல் முன்னிலை வகித்தார். முன்னாள் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் மணிவேல் போராட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த போராட்டத்தில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் கிருஷ்ணசாமி, செங்கோட்டையன், மாவட்ட குழு உறுப்பினர் சுந்தரம் மற்றும் நிர்வாகிகள், மீனா, ராஜா, ஞான சவுந்திரி, தேவி, மாதேஸ்வரி, சலீம் சாதிக், மோகன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 30 பேரை போலீசார் கைது செய்தனர். பிறகு மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.


Next Story