கிராம மக்கள் சாலை மறியல்
தேன்கனிக்கோட்டை அருகே லாரியை சிறைபிடித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே கொரட்டகிரி கிராமத்தில் உள்ள ஜல்லி கிரசரில் இருந்து தினமும் லாரிகள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு ஜல்லிகற்கள் எடுத்து செல்லப்படுகிறது. இதனால் சாலைகள் சேதமடைவதாகவும், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் கூறி நேற்று லாரிகளை கிராமமக்கள் சிறைபிடித்தனர். பின்னர் அவர்கள் கொட்டும் மழையில் குடை பிடித்தபடி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை போலீசார் மற்றும் தாசில்தார் சரவணபெருமாள் மற்றும் வருவாய்த்துறையினர் விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஜல்லி கிரசரில் இருந்து செல்லும் லாரிகளால் சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக மாறி விட்டது. இதனால் வாகனங்களில் செல்ல முடியவில்லை. மேலும் ஜல்லி பவுடர் பரவுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமமக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.