பருத்திக்கு கூடுதல் விலை கேட்டு விவசாயிகள் சாலை மறியல்


பருத்திக்கு கூடுதல் விலை கேட்டு விவசாயிகள் சாலை மறியல்
x

நாமக்கல்லில் பருத்திக்கு கூடுதல் விலை கேட்டு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

நாமக்கல்

பருத்தி ஏலம்

நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில் எருமப்பட்டி, சேந்தமங்கலம், வேலாகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம், பவித்திரம் உள்பட நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் பருத்தி மூட்டைகளை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

அதன்படி நேற்று 2 ஆயிரம் பருத்தி மூட்டைகள் ஏலத்திற்கு வந்திருந்தது. பின்னர் வழக்கம்போல் மறைமுக ஏலம் நடந்தது. அதில் சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டு தாங்கள் விரும்பிய பருத்திகளுக்கான ஏலத் தொகையை கோரினார்கள்.

சாலை மறியல்

இதனிடையே பருத்திக்கு கடந்த வாரத்தைவிட விலையை குறைத்து வியாபாரிகள் ஏலம் கோரியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கம் முன்பு உள்ள திருச்செங்கோடு பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வியாபாரிகளும், கூட்டுறவு சங்க அதிகாரிகளும் மறைமுக ஒப்பந்தம் வைத்துக் கொண்டு பருத்திக்கான விலையை குறைப்பதாக அவர்கள் புகார் தெரிவித்தனர். மேலும் கடந்த வாரம் ஒரு கிலோ பருத்திக்கு ரூ.100 வரை வழங்கப்பட்டதாகவும், அதேபோல் இந்த வாரமும் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதேபோல் கூட்டுறவு சங்க அதிகாரிகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

தகவல் அறிந்த நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

அப்போது உங்கள் கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியதின்பேரில் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் ½ மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையில் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

பின்னர் கூட்டுறவு சங்க வளாகத்தில் அதிகாரிகள் மற்றும் விவசாயிகளுடன் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ராசிபுரம் உள்பட பிற கூட்டுறவு சங்கங்களில் பருத்திக்கு அதிக விலை வழங்கப்பட்டு உள்ளது. எனவே பருத்திக்கு கூடுதல் விலை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

ரூ.51 லட்சம்

அதற்கு பதிலளித்து பேசிய அதிகாரிகள் கடந்த வாரம் அதிகபட்சமாக ரூ.87 மட்டுமே வழங்கப்பட்டதாகவும், அனைத்து பகுதிகளிலும் பருத்திக்கான விலை குறைந்து வருவதால் நாமக்கல்லிலும் பருத்திக்கு விலை குறைவதாக தெரிவித்தனர். இதையடுத்து விவசாயிகள் வியாபாரிகள் கோரும் விலைக்கு விருப்பம் இருந்தால் பருத்தி மூட்டைகளை வழங்கலாம் என்றும், இல்லையெனில் எங்கு அதிக விலை கிடைக்கிறதோ அங்கு வழங்கலாம் எனவும் போலீசார் அறிவுறுத்தினர்.

இதையடுத்து நடந்த ஏலத்தில் ஆர்.சி.எச். ரக பருத்தி விலை ஒரு குவிண்டாலுக்கு குறைந்தபட்சமாக ரூ.4,240-க்கும் அதிகபட்சமாக ரூ.7,599-க்கும், கொட்டு ரக பருத்தி குறைந்தபட்சமாக ரூ.2,999-க்கும் அதிகபட்சமாக ரூ.4,999-க்கும் ஏலம் போனது. மொத்தமாக 2 ஆயிரம் மூட்டைகளை ரூ.51 லட்சத்திற்கு வியாபாரிகள் ஏலத்தில் எடுத்ததாக கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story