பாதை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
கெலமங்கலம் அருகே பாதை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராயக்கோட்டை
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள போடிச்சிப்பள்ளி கிராமத்தில் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர். இதையடுத்து வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் பொது பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடித்து சாலை வசதி செய்து தர முடிவு செய்தனர். இதையடுத்து வருவாய்த்துறை அலுவலர்கள் போடிச்சிப்பள்ளி கிராமத்தில் பாதையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.இந்தநிலையில் நேற்று பாதை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா விரைந்து வந்து இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். ஒரு கட்டத்தில் மறியலில் ஈடுபட்டவர்கள் உதவி கலெக்டர் வாகனத்தை முற்றுகையிட்டனர். இதனையடுத்து அலுவலர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அரசு புறம்போக்கில் கட்டிய வீட்டை இடித்து பாதை வசதி செய்து கொடுத்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு சென்றனர். உதவி கலெக்டர் வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.