காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 30 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-31T00:16:21+05:30)

ஊத்தங்கரை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை

ஊத்தங்கரை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியல்

ஊத்தங்கரை ஒன்றியம் மிட்டப்பள்ளி ஊராட்சியில் உள்ள எம்.ஜி.ஆர். நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு கடந்த ஒரு வாரமாக குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலை புதுச்சேரி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

அதன்பேரில் ஊத்தங்கரை போலீஸ் துணை சூப்பிரண்டு அமலஎட்வின், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஷ்குமரன், உமா, ஊராட்சி மன்ற தலைவர் சின்னத்தாய் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் எம்.ஜி.ஆர். நகருக்கு தனி பைப் லைன் அமைத்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பின்னர் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து சென்றனர். இந்த சாலை மறியலால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்ற மாணவர்கள், வாகனங்களில் சென்றவர்கள் பாதிக்கப்பட்டனர்.


Next Story