மர்ம விலங்கை பிடிக்ககோரி பொதுமக்கள் சாலை மறியல்
கபிலர்மலை அருகே மர்ம விலங்கை பிடிக்ககோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பரமத்திவேலூர்
மா்ம விலங்கு
பரமத்திவேலூர் தாலுகா, இருக்கூர் அருகே உள்ள செஞ்சுடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்ராஜா. கடந்த 31-ந் தேதி இவரது மாட்டுத் தொழுவத்தில் கட்டி இருந்த கன்றுகுட்டியை மர்ம விலங்கு கடித்து கொன்று அப்பகுதியிலேயே போட்டு விட்டு சென்றது. தகவல் அறிந்து அங்கு வந்த இருக்கூர் கிராம நிர்வாக அலுவலர் வேணுகோபால், நாமக்கல் வனவர்கள் சந்திரசேகர், பிரியங்கா ஆகியோர் இறந்த கன்று குட்டியை பிரேத பரிசோதனை செய்தும், மர்ம விலங்கின் கால்தடங்களை பதிவு செய்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு செஞ்சுடையாம்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரது வீட்டின் முன்பு கட்டி வைத்திருந்த வளர்ப்பு நாயை மர்ம விலங்கு கடித்ததில் நாயின் சத்தம் கேட்டது. அப்போது வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்ததை பார்த்து மர்ம விலங்கு அங்கிருந்து செனறு விட்டது. நேற்று காலை அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் தியாகராஜன் என்பவரது வீட்டில் இருந்த வளர்ப்பு நாயை மர்ம விலங்கு கடித்து இறந்து கிடந்ததை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சாலை மறியல்
இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், வனத்துறையினர் உடனடியாக அந்த பகுதியில் கேமராவை பொருத்தி கூண்டு வைத்து மர்ம விலங்கை பிடிக்க கோரி பரமத்தியில் இருந்து கபிலர்மலை செல்லும் இருக்கூரில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்திவேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சேகர், பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன், தாசில்தார் கலைச்செல்வி மற்றும் வனத்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மர்ம விலங்கை பிடிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர். தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மர்ம விலங்கின் நடமாட்டம் காரணமாக அப்பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.