விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்


விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 4 March 2023 12:15 AM IST (Updated: 4 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

உத்தனப்பள்ளி அருகே சிப்காட் அமைக்க விளை நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 200 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை

உத்தனப்பள்ளி அருகே சிப்காட் அமைக்க விளை நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 200 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

5-வது சிப்காட்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி மற்றும் தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட உத்தனப்பள்ளி, அயர்னப்பள்ளி நாகமங்கலம் ஊராட்சிகளில் 5-வது சிப்காட் 3,034 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படுகிறது. இதற்கு விவசாய நிலங்கள் கையகப்படுத்தினால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்.

இதே போல், சிப்காட் அமைய உள்ள உள்ள பகுதியில் குடியிருப்புகளும் உள்ளதால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதனால் விவசாய நிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து உத்தனப்பள்ளி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் எதிரே தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு போராட்டங்களில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

சாலை மறியல்

இந்த போராட்டத்தின் 58-வது நாளான நேற்று, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே தொடர் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் அறிவித்து இருந்தனர். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று உத்தனப்பள்ளியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கு தலைமையில் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

உத்தனப்பள்ளியில் இருந்து விவசாயிகள், கலெக்டர் அலுவலகத்திற்கு வருவதற்காக அந்த பகுதியில் திரண்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து போலீசாரை கண்டித்து, விவசாயிகள், பெண்கள், குழந்தைகள் உள்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் திடீரென, தர்மபுரி-ஓசூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

200 பேர் கைது

இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 200 பேரை போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். முன்னதாக சிப்காட்டுக்கு நிலத்தை கையகப்படுத்துவதை அரசு கைவிட வேண்டும். சிப்காட் அமைக்க விளைநிலங்களை தரமாட்டோம் என விவசாயிகள் கோஷங்கள் எழுப்பினர். மேலும், தங்களது காத்திருப்பு போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்தனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story