காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
புதுச்சத்திரம் அருகே சீரான குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
குடிநீர் வினியோகம்
புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது தத்தாதிரிபுரம் ஊராட்சி. இங்குள்ள 1-வது வார்டு, வடக்கு வீதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில மாதங்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் முதல்-அமைச்சர் தனிப்பிரிவு, கலெக்டர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் மனு அளித்து இருந்தனர். இதையடுத்து தத்தாதிரிபுரத்தில் சுழற்சி முறையில் குடிநீர் வழங்க அதிகாரிகள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
சாலை மறியல்
ஆனால் அதன் பிறகும் முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை என கூறி வடக்கு வீதி பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் நேற்று காலை தத்தாதிரிபுரத்தில் உள்ள ஏளூர் பிரிவு சாலை அருகே மறியலில் ஈடுபட்டனர். அதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சீரான குடிநீர் கேட்டு பலமுறை முறையிட்டும் ஊராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர். மேலும் அதிகாரிகளின் அறிவுறுத்தலை பின்பற்றாததால், குடிநீர் பிரச்சினை தொடர் கதையாகிவிட்டதாக அவர்கள் கூறினர்.
போக்குவரத்து பாதிப்பு
இதனிடையே குடிநீர் பிரச்சினையை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டம் காரணமாக அங்கு சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.