காரிமங்கலம் அருகே குடிநீர் வழங்க கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
காரிமங்கலம்
காரிமங்கலம் அருகே குடிநீர் வழங்க கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
காரிமங்கலம் ஒன்றியம் பெரியாம்பட்டி முதல் நிலை ஊராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர். நகர், ராவணன் கொட்டாய், பூதாளன் கொட்டாய் ஆகிய பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளுக்கு. கடந்த சில மாதங்களாக ஒகேனக்கல் குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் சீராக குடிநீர் வழங்க கோரி நேற்று பெரியாம்பட்டி மெயின் ரோட்டில் திடீரென காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, கலைவாணி, தாசில்தார் சுகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் ஆகியோர் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து பெண்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
அறிவுறுத்தல்
இதேபோல் சமத்துவபுரம் பகுதியிலும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்து சென்ற அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முறைகேடாக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து முறைகேடாக அமைக்கப்பட்ட குடிநீர் குழாயை அகற்ற வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகத்திற்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
மேலும் சீராக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.