சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி பெரம்பலூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் மற்றும் விற்பனையாளர்கள், தொழிலாளர்கள் சங்கத்தினர் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே காந்தி சிலை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் வரதராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரெங்கராஜ், துணைத்தலைவர் செல்லதுரை ஆகியோர் சங்கத்தின் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சாலையோர வியாபாரிகளை விடுபடாமல் கணக்கெடுக்க வேண்டும். கணக்கெடுத்து புகைப்படம் எடுத்தவர்களுக்கு அடையாள அட்டை உடனே வழங்க வேண்டும். நகர விற்பனை குழுவுக்கான தேர்தலை உடனடியாக நடத்திட வேண்டும். நகர விற்பனை குழுவில் மூன்றில் 2 பங்கு இடங்களை சாலையோர வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செய்திட வேண்டும். சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்திற்கு விரோதமாக சாலையோர வியாபாரிகளை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் போக்கினை கைவிட வேண்டும். அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கும் இலவச தள்ளுவண்டி வழங்கிட வேண்டும். கூட்டுறவு வங்கிகள் மூலம் வட்டி இல்லா கடனாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும் என்கிற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிட வேண்டும். சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தில் கிராம ஊராட்சிகளையும் இணைத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.