அரூர் அருகேவிவசாயி வீட்டில் ரூ.25 லட்சம் கொள்ளைமர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


அரூர் அருகேவிவசாயி வீட்டில் ரூ.25 லட்சம் கொள்ளைமர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 16 July 2023 1:00 AM IST (Updated: 16 July 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

அரூர்:

அரூர் அருகே விவசாயி வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ.25 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நிலம் விற்பனை

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள அஞ்சல்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன் (வயது 44). விவசாயி. இவருடைய பெரியப்பா மகள் விமலா. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். விமலா கீரைப்பட்டியில் உள்ள விவசாய நிலத்தை விற்பனை செய்து அந்த பணத்தை மகள்களுக்கு பிரித்து கொடுக்க முடிவு செய்தார்.

அதன்படி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நிலத்தை விற்பனை செய்ய விலை பேசி ரூ.25 லட்சத்தை முன்பணமாக வாங்கியுள்ளார். இந்த பணத்தை குமரேசனிடம் கொடுத்து வைத்திருந்த விமலா அவருடைய வீட்டிலேயே தங்கி இருந்தார். அந்த பணத்தை குமரேசன் தோட்டத்தில் உள்ள வீட்டில் இரும்பு மேஜையின் டிராயரில் வைத்து பூட்டிவிட்டு வெளியே சென்றார்.

ரூ.25 லட்சம் கொள்ளை

இதைத்தொடர்ந்து அந்த பணத்தை வைத்து விமலாவின் மகள்கள் பெயரில் வீட்டுமனைகள் வாங்க முடிவு செய்தனர். இதையடுத்து வீட்டில் வைத்திருந்த பணத்தை எடுப்பதற்காக குமரேசன் சென்றார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இரும்பு டிராயர் திறந்து இருந்தது. மேலும் அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.25 லட்சம் மற்றும் 4 பவுன் நகைகள் கொள்ளைபோனது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த குமரேசன் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக அரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன்ஜேசுபாதம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகள் தடயவியல் துறையினர் மூலம் பதிவு செய்யப்பட்டது. சம்பவ இடத்திற்கு மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. ஆனால் மோப்ப நாய் சிறிது தூரம் ஓடி விட்டு நின்றுவிட்டது.

வலைவீச்சு

இதையடுத்து குமரேசனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகலிங்கம், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் பாபு ஆகியோர் விசாரணை நடத்தினர். நிலத்தை விற்ற பணம் வீட்டில் வைக்கப்பட்டிருப்பதை நோட்டம் விட்ட மர்மநபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story