ஏரியூர் அருகே 2 கோவில்களில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
ஏரியூர் அருகே 2 கோவில்களில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
ஏரியூர்:
ஏரியூர் அருகே அஜ்ஜனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட சந்தைப்பேட்டையில் ஸ்ரீ மகா மாரியம்மன், முனியப்பன் கோவில்கள் உள்ளன. இதில் மகா மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 2 கோவில்களையும் பூட்டி விட்டு பூசாரிகள் சென்று விட்டனர். பின்னர் நேற்று காலை பூஜை செய்வதற்காக கோவிலை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது, அம்மன் கழுத்தில் இருந்த ½ பவுன் தாலி திருட்டு போனது தெரியவந்தது. மேலும் மகா மாரியம்மன் கோவில் உண்டியல், முனியப்பன் கோவில் உண்டியல்கள் உடைக்கப்பட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து ஏரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
இதுஒருபுறம் இருக்க ஏரியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தொடர் திருட்டு நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 3 கோவில்களில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு நகை, பணம் திருடு போயிருந்த நிலையில், தற்போது மீண்டும் 2 கோவில்களில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். தொடர் திருட்டு சம்பவங்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.