வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளை
பள்ளிபாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகையை கொள்ளை அடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பள்ளிபாளையம்
பணம், நகை கொள்ளை
பள்ளிபாளையம் அருகே தெற்கு பாளையம் பகுதியை சேர்ந்தவர் திருத்துவராஜ் (வயது 38). இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் திருத்துவராஜ் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றார். பின்னர் கோவிலில் இருந்து நேற்று காலை வீட்டுக்கு வந்த அவர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்தார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது துணிமணிகள் சிதறியபடி பீரோ திறந்து கிடந்தது. மேலும் அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.85 ஆயிரம் மற்றும் ஒரு பவுன் மதிப்புடைய 2 கம்மல்களை மர்ம நபர்கள் திருடியது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து திருத்துவராஜ் பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.
விசாரணை
இதன்பேரில் சம்பவ இடத்திற்கு பள்ளிபாளையம் போலீசார் வந்தனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இதைதொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணம், நகையை கொள்ளை அடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.