ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் வீட்டில் நகைகள் கொள்ளை
திருச்சிற்றம்பலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருச்சிற்றம்பலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர்
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் மேற்கு கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது62). இவர் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் கடந்த 23-ந் தேதி தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டார். வீட்டில் யாரும் இல்லை. கடந்த 26-ந் தேதி காலை வீட்டுக்கு திரும்பிச்சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த அனைத்து கதவுகளின் பூட்டுக்களும் உடைக்கப்பட்டு கிடந்தது. பீரோவில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
மோப்ப நாய் வருகை
இது குறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ராஜ்குமார், திருச்சிற்றம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரவி சக்கரவர்த்தி மற்றும் போலீசார் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர்.
தஞ்சையில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. சம்பவ இடத்திலிருந்து சிறிது தூரம் ஓடிச் சென்ற நாய் அங்கேயே நின்று விட்டது.
கண்காணிப்பு கேமரா
தஞ்சையில் இருந்து வந்த தடய அறிவியல் துறை நிபுணர்களும் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் அதே பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து விஜயகுமார் திருச்சிற்றம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரையன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.