அடுத்தடுத்து 2 செல்போன் கடைகளில் கொள்ளை
விருத்தாசலத்தில் அடுத்தடுத்து 2 செல்போன் கடைகளில் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த தொட்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜன் (வயது 22), இவர் விருத்தாசலம் ஆலடி சாலை சந்திப்பில் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று திரும்பி வந்து பார்த்தபோது, கடையின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து அவர் கடைக்குள் சென்று பார்த்தபோது, கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.8ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள ஒரு செல்போனையும் காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.
போலீசார் விசாரணை
மேலும் ராஜன் கடை அருகே மாணிக்கவாசகர் நகரை சேர்ந்த அன்பழகன் (44) என்பவர் நடத்தி வரும் செல்போன் கடைக்குள்ளும் மர்மநபர்கள் புகுந்து அங்கிருந்த ரூ.2 ஆயிரம் ரொக்கம், ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றையும் கொள்ளையடித்து சென்றனர். இது குறித்த தகவலின் பேரில் விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் ராஜன், அன்பழகன் ஆகிய 2 பேரும் தங்களது கடைகளை பூட்டிவிட்டு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், அவர்களது கடைகளுக்குள் புகுந்து அங்கிருந்த பணம் மற்றும் செல்போன்களை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.
தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவின் பதிவான காட்சிகளை கொண்டு அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தனித்தனியாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
2-வது முறையாக கொள்ளை சம்பவம்
கொள்ளை சம்பவம் நடந்த அன்பழகன் கடையில் கடந்த அக்டோபர் மாதம் 14-ந்தேதி மர்மநபர்கள் புகுந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள செல்போன், பணத்தை கொள்ளையடித்து சென்றிருந்தனர். இந்த நிலையில் தற்போது 2-வது முறையாக அன்பழகன் கடையில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
விருத்தாசலம் பகுதியில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வருவதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதை தவிர்க்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். மேலும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருபவர்களை விரைந்து கைது செய்யநடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.