தலைமை செயலக ஊழியர் உள்பட 2 பேரிடம் வழிப்பறி


தலைமை செயலக ஊழியர் உள்பட 2 பேரிடம் வழிப்பறி
x

விழுப்புரத்தில் தலைமை செயலக ஊழியர் உள்பட 2 பேரிடம் வழிப்பறி செய்துவிட்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பிச்சென்ற 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் தந்தை பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 50). இவர் சென்னை தலைமை செயலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று பணியை முடித்துக்கொண்டு சென்னையில் இருந்து விழுப்புரத்திற்கு பஸ்சில் புறப்பட்டார்.

விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திற்கு இரவு 9.30 மணியளவில் வந்திறங்கிய அவர், அங்குள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைத்திருந்த தனது மோட்டார் சைக்கிளின் மூலம் வீட்டிற்கு புறப்பட்டார். விழுப்புரம் பாண்டியன் நகர் அருகில் செல்லும்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர்கள் 2 பேர் திடீரென ஜெயச்சந்திரனை வழிமறித்து அவரை மிரட்டி அவர் வைத்திருந்த செல்போன், ரூ.500 ரொக்கம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டனர்.

மற்றொரு சம்பவம்

இதேபோல் விழுப்புரம் பாப்பான்குளம் பகுதியை சேர்ந்த திருஞானம் (70) என்பவர் நேற்று முன்தினம் இரவு தனது மனைவியுடன் ஒரு மோட்டார் சைக்கிளில் அய்யூர்அகரம் பாலம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை பின்தொடர்ந்து முககவசம் அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர்கள் 2 பேர் திடீரென திருஞானத்தை வழிமறித்து அவர் வைத்திருந்த செல்போனை பறித்துச்சென்று விட்டனர்.

4 பேருக்கு வலைவீச்சு

இதுகுறித்து ஜெயச்சந்திரன், திருஞானம் ஆகிய இருவரும் தனித்தனியாக விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story