கோவிலில் உண்டியல் பணம் கொள்ளை
சுசீந்திரம் அருகே ராகவேந்திரர் கோவிலில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
மேலகிருஷ்ணன்புதூர்,
சுசீந்திரம் அருகே ராகவேந்திரர் கோவிலில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ராகவேந்திரர் கோவில்
சுசீந்திரம் புறவழிச்சாலையில் ராகவேந்திரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் காலை, மாலை நேரங்களில் பூஜைகள் நடப்பது வழக்கம். அதே சமயத்தில் வியாழக்கிழமை தோறும் வழக்கத்தை விட கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் கோவிலில் பூஜைகள் முடிந்த பிறகு கோவிலை பூட்டி விட்டு சென்றனர். பின்னர் நேற்று காலையில் கோவில் மேற்பார்வையாளர் அனந்த கிருஷ்ணன் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உண்டியல் பணம் கொள்ளை
பின்னர் அவர் மற்ற நிர்வாகிகளை வரவழைத்து கோவிலுக்குள் சென்று பார்த்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த 2 உண்டியல்கள் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. மேலும் கோவிலில் இருந்த 3 பீரோக்களும் உடைக்கப்பட்டு பொருட்கள் ஆங்காங்கே சிதறி அலங்கோலமாக கிடந்தன. உண்டியலில் இருந்த ரூ.75 ஆயிரம் காணிக்கை பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் இதுகுறித்து அனந்தகிருஷ்ணன் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா, சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஆஷாஜெபகர் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோவிலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
2 தனிப்படை
கோவிலுக்குள் நள்ளிரவு புகுந்த மர்மஆசாமிகள் உண்டியல் பணத்தை கொள்ளையடித்ததும், பீரோவில் தங்க நகைகள் இருக்கும் என்ற எண்ணத்தில் 3 பீரோக்களையும் உடைத்துள்ளனர். ஆனால் அதில் அவர்கள் எதிர்பார்த்ததை போன்று நகைகள் இல்லாததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அதே சமயத்தில் கோவிலில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனை கவனித்த மர்ம ஆசாமிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளான ஹார்ட் டிஸ்கை எடுத்துச் சென்றிருக்கலாம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து கோவிலில் பதிவாகியிருந்த மர்மஆசாமிகளின் கைரேகைகளை பதிவு செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த கொள்ளையில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள மர்மஆசாமிகளை பிடிக்க 2 தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. ராகவேந்திரர் கோவிலில் நடந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.