'இந்திய மக்களிடையே மத நல்லிணக்கம் எப்போதும் நீடிக்க வேண்டும்'- சத்தியமங்கலத்தில் போப் ஆண்டவரின் இந்திய தூதர் பேச்சு


இந்திய மக்களிடையே மத நல்லிணக்கம் எப்போதும் நீடிக்க வேண்டும்- சத்தியமங்கலத்தில் போப் ஆண்டவரின் இந்திய தூதர் பேச்சு
x

‘இந்திய மக்களிடையே மத நல்லிணக்கம் எப்போதும் நீடிக்க வேண்டும்’ என்று சத்தியமங்கலத்தில் போப் ஆண்டவரின் இந்திய தூதர் லியோ போல்டொ ஜிரெல்லி கூறினார்.

ஈரோடு

சத்தியமங்கலம்

'இந்திய மக்களிடையே மத நல்லிணக்கம் எப்போதும் நீடிக்க வேண்டும்' என்று சத்தியமங்கலத்தில் போப் ஆண்டவரின் இந்திய தூதர் லியோ போல்டொ ஜிரெல்லி கூறினார்.

வருகை

ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை இடமாக ரோம் நாட்டில் உள்ள வாடிகன் உள்ளது. போப் ஆண்டவராக போப் பிரான்சிஸ் இருந்து வருகிறார். அவருடைய இந்திய தூதராக லியோ போல்டொ ஜிரெல்லி உள்ளார். டெல்லியில் தங்கி உள்ள அவர் நேற்று காலை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்துக்கு வந்தார்.

அவருக்கு சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை சந்தைக்கடை சந்திப்பில் உள்ள புனித அருளானந்தர் ஆலயத்தின் பங்குத்தந்தை ரவி லாரன்ஸ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சிறப்பு கூட்டம்

இதைத்தொடர்ந்து அவர் ஆலய வளாகத்தில் உள்ள அரங்கத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது அவருக்கு கெம்பநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா குடிலை சேர்ந்த வினோத், சத்தியமங்கலம் ஜமாத் தலைவர் நசீருல்லாகான், சத்தியமங்கலம் நகராட்சி தலைவர் ஆர்.ஜானகி ராமசாமி ஆகியோர் சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இதையடுத்து அரங்கத்தில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்ட சிறப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊட்டி பிஷப் அமுல்ராஜ் தலைமை தாங்கினார்.

மன நிறைவு

கூட்டத்தில் கலந்து கொண்ட போப் ஆண்டவரின் தூதர் லியோ போல்டொ ஜிரெல்லி பேசியதாவது:-

இங்கு அனைத்து மக்களும் மத நல்லிணக்கத்தோடு இருப்பதை காணும்போது மன நிறைவு அடைகிறேன். மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஒற்றுமை, மத நல்லிணக்கம் எப்போதும் இந்திய மக்களிடையே நீடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் மட்டுமல்ல போப் ஆண்டவரின் விருப்பமும் அதுதான்.

இந்திய ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் துணையாக இருந்து அனைவரும் சிறந்த குடிமகனாக வாழ வேண்டும். வாழ்வில் உயர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

திருப்பலி

இதைத்தொடர்ந்து புனித அருளானந்தர் ஆலயத்தில் கூட்டு திருப்பலி போப் ஆண்டவரின் தூதர் லியோ போல்டொ ஜிரெல்லி தலைமையில் நடந்தது.

இதில் ஏராளமான பங்குத்தந்தைகள், கன்னியாஸ்திரிகள், சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் போப் ஆண்டவரின் தூதரான லியோ போல்டொ ஜிரெல்லியை நேரில் சந்தித்து கிறிஸ்தவர்கள் பலர் ஆசி பெற்றனர்.


Next Story