பிளஸ்-2 பொதுத்தேர்வு:அறை கண்காணிப்பாளர்கள் 1,377 பேர் குலுக்கல் முறையில் தேர்வு

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு பணியில் ஈடுபட உள்ள அறை கண்காணிப்பாளர்கள் 1,377 பேர் நேற்று குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.
பிளஸ்-2 தேர்வு
நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 13-ந் தேதி தொடங்கி, பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்த ஆண்டு 10 ஆயிரம் மாணவர்கள், 9,877 மாணவிகள் என மொத்தம் 19 ஆயிரத்து 877 பேர் தேர்வு எழுத உள்ளனர். அதேபோல் வருகிற 15-ந் தேதி தொடங்கும் பிளஸ்-1 பொதுத்தேர்வை 8,711 மாணவர்கள், 9,102 மாணவிகள் என மொத்தம் 17 ஆயிரத்து 813 பேர் எழுத உள்ளனர்.
மேலும் தனித்தேர்வர்கள் பிளஸ்-1 தேர்வை 100 பேரும், பிளஸ்-2 தேர்வை 352 பேரும் எழுத உள்ளனர். மொத்தமாக 85 தேர்வு மையங்கள், மாவட்டம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
குலுக்கல் முறையில் தேர்வு
இந்த நிலையில் அறை கண்காணிப்பாளர்கள், குலுக்கல் முறையில் மையங்களை தேர்வு செய்யும் பணி நேற்று நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் ரவி தலைமை தாங்கினார். பள்ளி கல்வி துணை ஆய்வாளர் பெரியசாமி, கண்காணிப்பாளர் விக்டர்பால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து குலுக்கல் முறையில் 1,377 அறை கண்காணிப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு பணியில் முதன்மை கண்காணிப்பாளர்கள் 85 பேர், துறை அலுவலர்கள் 85 பேர், அறை கண்காணிப்பாளர்கள் 1,377 பேர், நிலையான பறக்கும் படையினர் 220 பேர், வழித்தட அலுவலர்கள் 20 பேர் என மொத்தம் 1,787 பேர் நியமிக்கப்பட்டு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






