ரூ.1 கோடியே 14 லட்சம் நகைகள், 253 செல்போன்கள் மீட்பு- போலீஸ் கமிஷனர் லோகநாதன் தகவல்


ரூ.1 கோடியே 14 லட்சம் நகைகள், 253 செல்போன்கள் மீட்பு- போலீஸ் கமிஷனர் லோகநாதன் தகவல்
x

மதுரை நகரில் காணமால் மற்றும் திருடப்பட்ட ரூ.1 கோடியே 14 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள நகைகள், 253 செல்போன்கள் மீட்கப்பட்டதாக போலீஸ் கமிஷனர் லோகநாதன் தெரிவித்தார்.

மதுரை

மதுரை நகரில் காணமால் மற்றும் திருடப்பட்ட ரூ.1 கோடியே 14 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள நகைகள், 253 செல்போன்கள் மீட்கப்பட்டதாக போலீஸ் கமிஷனர் லோகநாதன் தெரிவித்தார்.

253 செல்போன்கள் ஒப்படைப்பு

மதுரை நகர் போலீஸ் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிக்க போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு சைபர் கிரைம் போலீசாரின் நடவடிக்கை மூலம் 253 செல்போன்கள் மீட்கப்பட்டன.

மீட்கப்பட்ட செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. இதில் கமிஷனர் லோகநாதன் கலந்து கொண்டு செல்போன்களை உரிமையாளர்களிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணை கமிஷனர்கள் பிரதீப்(தெற்கு), சினேகபிரியா (வடக்கு), மங்களேஸ்வரன்(தலைமையிடம்) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

2 பேர் கைது

இதுகுறித்து கமிஷனர் லோகநாதன் கூறும்போது, நகரில் பல்வேறு இடங்களில் தொலைந்து மற்றும் திருட்டு போன 253 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன. அதுதவிர திருடப்பட்ட 4 மோட்டார் சைக்கிள்கள், 2 மடிக்கணினிகள் ஆகியவற்றையும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. திடீர்நகர் மற்றும் எஸ்.எஸ்.காலனி பகுதியில் திருடப்பட்ட ரூ.1 கோடியே 14 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள சுமார் 279 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் திருடப்பட்ட 177 பவுன் திருடப்பட்ட வழக்கில் கூடல்புதூர் பகுதியை சேர்ந்த லாரன்ஸ் (வயது 40) என்பவரை கைது செய்துள்ளோம்.

திடீர்நகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் விடுதியில் தங்கியிருந்த நகைக்கடை ஊழியரிடம் 102 பவுன் திருடப்பட்டது. அந்த வழக்கில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த பினிடி ரமேஷ் பாபு (54) என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகளில் சம்பந்தம் இருப்பது தெரியவந்தது. மேலும் அவர் போலி சாவிகள் தயார் செய்து, கதவினை திறந்து அங்குள்ள பொருட்களை திருடி இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

ரூ.1 கோடியே 14 லட்சம்

இதன் மூலம் 1 கோடியே 14 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களைமீட்டுள்ளோம்.இதனை மீட்ட தனிப்படை மற்றும் போலீசார் அனைவரையும் பாராட்டுகிறேன். இது தவிர வெகுநாட்களாக கண்டுபிடிக்க முடியாமல் உள்ள வழக்குகளை சிறப்பு தனிப்படை அமைத்து விசாரித்து வருகிறோம்.மேலும் நகரில் மோட்டார் சைக்கிள்கள் அதிகமாக திருடப்படும் இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைத்தும், தனிப்படை போலீசாரும் மூலம் கண்காணித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story