திருச்சி தொழிலதிபரிடம் ரூ.1½ கோடி மோசடி


திருச்சி தொழிலதிபரிடம் ரூ.1½ கோடி மோசடி
x

தனியார் வங்கி காசோலையை பயன்படுத்தி திருச்சி தொழில்அதிபரிடம் ரூ.1½ கோடி மோசடி செய்த உதவி மேலாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி

தனியார் வங்கி காசோலையை பயன்படுத்தி திருச்சி தொழில்அதிபரிடம் ரூ.1½ கோடி மோசடி செய்த உதவி மேலாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தொழிலதிபரிடம் மோசடி

திருச்சி தில்லைநகர் மேற்கு விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது44). இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனக்கு சொந்தமான ஓட்டலை ரூ.3 கோடிக்கு விற்பனை செய்தார். அப்போது அவரிடம் அறிமுகமான பொன்னகரில் உள்ள பின்கேர் ஸ்மால் பைனான்ஸ் வங்கியின் உதவி மேலாளர் லெட்சுமிகாந்த், மேலாளர் சரவணன், உதவி மேலாளர் மோகன்ராஜ் ஆகியோர் தாங்கள் பணிபுரியும் வங்கியில் பணத்தை டெபாசிட் செய்தால் 8 சதவீத வட்டி தருவதாக கூறி உள்ளனர்.

இதனை நம்பி ராம்குமார் ஓட்டலை விற்ற பணத்தில் ரூ.1 கோடியே 53 லட்சத்தை குறிப்பிட்ட அந்த வங்கியில் தனது தாய் லலிதா, சகோதரர் அழகுராஜா ஆகியோரின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்தார். இதனை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி லெட்சுமிகாந்த் மற்றும் சிலர் மத்திய பஸ்நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் வைத்து ராம்குமாரிடம், ஏலம் விடும் அடகு நகைகளை ஏலத்தில் எடுத்து விற்றால் முதலீடு செய்வோரின் முதலீட்டு தொகைக்கு ஏற்றவாறு 10 நாட்களில் லாபம் கிடைக்கும் என கூறி உள்ளனர்.

3 பேர் கைது

இதை நம்பி ராம்குமாரும், அவரது சகோதரரும் 15 காசோலையில் கையெழுத்து மட்டும் போட்டு, தொகை, பெயர் மற்றும் தேதி குறிப்பிடாமல் லெட்சுமிகாந்திடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த காசோலைகளை பயன்படுத்தி லெட்சுமிகாந்த் மற்றும் சிலர் வங்கியில் இருந்த ரூ.1 கோடியே 52 லட்சத்து 46 ஆயிரத்தை எடுத்து மோசடி செய்தனர். இது பற்றி அறிந்த ராம்குமார் அந்த பணத்தை மீட்டு தரும்படி செசன்ஸ் கோர்ட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

பின்னர் இந்த வழக்கு திருச்சி மாநகர குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இன்ஸ்பெக்டர் கோசலைராமன் விசாரணை நடத்தி மோசடியில் ஈடுபட்டதாக தனியார் வங்கி உதவி மேலாளர் லெட்சுமிகாந்த், இதற்கு உடந்தையாக இருந்த சுரேந்தர், முருகன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.


Next Story