வேன் டிரைவர்களுக்கு மானிய விலையில் டீசல் வாங்கித்தருவதாக ரூ.1¼ லட்சம் மோசடி-2 பேர் கைது
வேன் டிரைவர்களுக்கு மானிய விலையில் டீசல் வாங்கி தருவதாக கூறி ரூ.1¼ லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஊட்டி
வேன் டிரைவர்களுக்கு மானிய விலையில் டீசல் வாங்கி தருவதாக கூறி ரூ.1¼ லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மானிய விலையில் டீசல்
நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த எப்பநாடு பகுதியை சேர்ந்தவர் சங்கரன் (வயது 52). இவர் சொந்தமாக பிக்கப் வேன் வைத்து ஓட்டி வருகிறார்.
கடந்த மே மாதம் 31-ந் தேதி சங்கரனுக்கு அவருடைய சகோதரர் மூலம் அறிமுகமான ஒருவர், தன்னுடைய பெயர் ரவி என்றும், அரசு பள்ளிகளுக்கு உணவு விநியோகம் செய்யும் துறையில் அதிகாரியாக இருப்பதாகவும் காலை சிற்றுண்டியை ஊட்டியில் இருந்து எடுத்துச் சென்று ஆடசோலை, அணிக்கொரை, தொரையட்டி, எப்பநாடு ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு கொடுக்க வேண்டும் எனவும் கூறி உள்ளார். அதற்கு ஒரு நாள் வாடகையாக ரூ.2,500, இறக்கு கூலி ரூ.400 தருவதாகவும், டீசல் மானிய விலையில் ரூ.70 வாங்கி தருவதாகவும் ஆசை வார்த்தை காட்டி உள்ளார்.
போலீசில் புகார்
இதைத் தொடர்ந்து மறுநாள் ஊட்டி வந்த சங்கரனிடம், ஊட்டி தாலுகா அலுவலகத்தில் மானிய விலை டீசலுக்கு ஒரு மாத முன்பணம் கட்ட வேண்டும் எனக்கூறி ரூ.26 ஆயிரம் பணம் பெற்றுக் கொண்டு ரவி என்று அறிமுகமான நபர் தாலுகா அலுவலகம் உள்ளே சென்றார்.
அதன் பின்னர் அவர் திரும்பி வரவில்லை. எந்த வழியாக வெளியே சென்றார் என்று தெரியவில்லை. நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வராததால் சங்கரன் தாலுகா அலுவலகத்திற்குள் சென்று விசாரித்தார்.
அப்போது ரவி என்று இங்கு யாரும் பணி புரியவில்லை என்றும், அதுபோல் யாரும் இங்கு வரவில்லை என்றும் தெரிவித்து விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கரன் இதுகுறித்து பல இடங்களில் விசாரித்து பார்த்தார்.
ஆனால் ரவி என்று அறிமுகமானவர் குறித்து எந்த தகவலும் தெரியாததால் இதுகுறித்து ஊட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
2 பேர் கைது
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மீனாபிரியா, சப்- இன்ஸ்பெக்டர் நிஷாந்தினி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ரவி என்ற பெயரில் அறிமுகமாகி மோசடி செய்தது குன்னூர் அருவங்காடு பகுதியை சேர்ந்த மேத்யூஸ் (வயது 40) என்பது தெரியவந்தது. மேத்யூஸ் முதல் கட்டமாக சங்கரன் உள்பட 5 பேரிடம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மோசடி செய்துள்ளார்.
மேலும் விசாரணையில் இவர் நூற்றுக்கணக்கானவர்களிடம் மோசடி செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து போலீசார் மேத்யூசையும், அவருடன் இருந்த குன்னூர் அண்ணா நகரை சேர்ந்த சாதிக் (40) என்பவரையும் கைது செய்தனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், தொடர் மோசடியில் ஈடுபட்டு கைதான மேத்யூஸ், கொடைக்கானலில் காய்கறி சாகுபடி செய்வதாகவும், ஊட்டியில் பழைய நாணயங்களை வாங்கி விற்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் கடந்த 5 வருடங்களாக இதுபோல் நூற்றுக்கணக்கானவர்களிடம் அவர் மோசடி செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மோசடி செய்யும் ஒவ்வொரு நபரிடமும் ஒவ்வொரு அரசு அலுவலகத்தில் வேலை செய்வதாக கூறியுள்ளார்.
மேலும் ஒவ்வொரு நபரிடமும் தலா ரூ.25 ஆயிரம் என்று குறைந்த அளவில் தொகை மோசடி செய்ததால் இதுவரை யாரும் புகார் அளிக்க முன் வரவில்லை என்றனர்.